Published : 27 Jul 2020 08:36 PM
Last Updated : 27 Jul 2020 08:36 PM
கார்ப்பரேட் நிறுவனங்களே திகட்டும் அளவுக்கு திருப்திப்படுத்துவதற்கு, "புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020”-ஐ வெளியிட்டு- அதன்மீது "கருத்துக் கேட்பு" என ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் மத்திய பாஜக அரசுக்கு திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு - அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிடுக.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்களுக்கு மேலாகியும்- ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் விதத்திலும்- நிதி ஒதுக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலும் ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அதிமுக அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மட்டுமின்றி- அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே உள்ளக் குமுறலுக்குள்ளாகும் விதத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழான குடிநீர்த் திட்டப் பணிகளைக்கூட ஊராட்சி மன்றங்களிடமிருந்து பறித்து- மாவட்ட அளவில் டெண்டர் விடுவதும், 14-வது நிதிக்குழு உள்ளாட்சி மன்றங்களுக்கு அளித்துள்ள அதிகாரங்களை அபகரிப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.
இதுபோலவே ‘100 நாள் வேலைத்திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டகளில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறித்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தகர்த்தெறியும் விதத்தில் எதேச்சதிகாரமாகச் செயல்படும் உள்ளாட்சித்துறை அமைச்சரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களையும், உள்ளாட்சி அமைப்புகளையும் சிறுமைப்படுத்துவதை முதல்வர் அனுமதிப்பது ஜனநாயக விரோதமானதாகும்.
ஆகவே, காந்தியடிகள் கண்ட கிராம ராஜ்யத்தின் அடிப்படை அம்சமாக அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் செயலைக் கைவிட்டு - கிராமங்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்றும், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திட வேண்டும் எனவும் அதிமுக அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐத் திரும்பப் பெறுக
கரோனா பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020, அத்தியாவசிய திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய அவசரச் சட்டங்களை நாடாளுமன்ற அமர்வில் இல்லாத நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசை இந்தக் கூட்டம் கண்டிப்பதோடு- இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
அதுமட்டுமில்லாமல், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களே திகட்டும் அளவுக்கு திருப்திப்படுத்துவதற்கு, "புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020”-ஐ வெளியிட்டு- அதன்மீது "கருத்துக் கேட்பு" என ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் மத்திய பாஜக அரசுக்கு இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள "2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை”யே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் வழிவகுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குறைசொல்லி குற்றம்சாட்டி வருகின்ற நிலையில்- இந்தப் புதிய வரைவு அறிக்கை, “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986”யை ரத்து செய்வதற்கு நிகரான ஒரு அராஜகமான நடவடிக்கை என்று இக்கூட்டம் கருதுகிறது.
தமிழகத்தில் சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்று ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர்க்கிறது. காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அதிமுக அரசின் துணையோடு மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் டெல்டா விவசாயிகளும்- மக்களும் கடுமையாக தினமும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” - அவற்றை எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்தும், “பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை” பலவீனப்படுத்தியும், “மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குழுவிற்கு மத்திய அரசே தலைவர் உறுப்பினர்களை நியமிக்க வழி செய்தும்” - கொண்டு வரப்பட்டுள்ள மாநில உரிமைகளுக்கு விரோதமான- ஜனநாயக விரோதமான சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நாடாளுமன்றம் கூடிய பிறகு ஏற்கெனவே உள்ள “2006 சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கை 2006”யை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் - நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்திடும் வகையிலும் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT