Published : 25 Jul 2020 03:17 PM
Last Updated : 25 Jul 2020 03:17 PM
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மரத்தடியில் பந்தல் அமைத்து முதல்முறையாக பேரவை நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் அரங்கு இன்று (ஜூலை 25) மூடப்பட்டது.
பட்ஜெட்டை நிறைவேற்றினால்தான் நிதி ஒதுக்க முடியும் என்பதால் நான்காவது தளத்திலுள்ள கமிட்டி அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர்.
இறுதியில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மரத்தடியில் நிகழ்வு நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து முடிவு எடுத்தார்.
அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை நுழைவுவாயிலில் உள்ள மரத்தடியில் பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டன. காலை 10 மணிக்குத் தொடங்கவிருந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் பகல் 1.30 மணிக்குத் தொடங்கியது.
சபாநாயகர் சிவக்கொழுந்து தொடங்கி வைத்துக் கூறுகையில், "எதிர்பாராத சூழலால் இங்கு நடத்துகிறோம். இதையே சட்டப்பேரவைக் கூடமாக அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார். பட்ஜெட் பொது விவாதம் இதைத்தொடர்ந்து தொடங்கியது.
முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "மக்களுக்குத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியம், அரசு ஊழியர் ஊதியம், அன்றாட செலவு தொகை ஆகியவற்றை நிறைவேற்றியாக வேண்டும். மானிய கோரிக்கைகளை விவாதத்துக்கு விடுகிறோம். பதில்கள் எழுத்துப்பூர்வமாக அனுப்புகிறோம்" என்று தெரிவித்தார்.
அதிமுக அன்பழகன் எழுந்து, "பாதுகாப்பற்ற சூழலை சட்டப்பேரவை உருவாக்கி விட்டது. கூட்டத்துக்கு வருவோரை சரியாக சோதனை செய்யவில்லை. தேக்க நிலையை அரசு உருவாக்கியுள்ளது. பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி விட்டனர். அமைச்சர்கள் குழுவை கூட்டுங்கள்" என்று வலியுறுத்தினார்.
திமுக எம்எல்ஏ சிவா கூறுகையில், "ரூ.5,000 நிதியும், 30 கிலோ அரிசியும் தர வேண்டும். மற்ற திட்டங்களை விட இதற்கு முக்கியத்துவம் தாருங்கள்" என்று தெரிவித்தார். .
சபாநாயகர் மானிய கோரிக்கை மீதான வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT