Last Updated : 24 Jul, 2020 09:45 PM

 

Published : 24 Jul 2020 09:45 PM
Last Updated : 24 Jul 2020 09:45 PM

கரோனா பாதிப்பு; திருச்சி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் பரிந்துரை

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் தினமும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று இந்தியன் மெடிக்கல் அசோசியேன் திருச்சி கிளை பரிந்துரை செய்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தினமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் இன்று (ஜூலை 24) புதிதாக 217 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,089. இதில், இதுவரை 1,763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட நிலையில், 1,275 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசின் கணக்கின்படி திருச்சி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51.

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதியைக் காட்டிலும் மாநகரப் பகுதியில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,276 பேர். இதில், மாநகரப் பகுதியில் வசிப்போர் மட்டும் 845 பேர்.

இந்த அளவுக்கு கரோனா பரவல் மாநகரில் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி போஸ்ட் மாஸ்டருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, இன்றும், நாளையும் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மாநகராட்சி சுகாதாரத் துறை நடத்தி வருகிறது. மேலும், யாருக்கேனும் தொடர் காய்ச்சல், வறட்டு இருமல், தொடர் சளி, தொடர் தும்மல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் 83001 13000 என்ற வாட்ஸ் அப் எண்ணையோ, 180 042 553 96 என்ற கட்டணமில்லா எண்ணிலேயோ அல்லது மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களை ஸ்ரீரங்கம்- 76395 11000, அரியமங்கலம் -76395 22000, பொன்மலை- 76395 33000, கோ.அபிஷேகபுரம்- 76395 44000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தியன் மெடிக்கல் அசோசியேசனின் திருச்சி கிளையின் தலைவர் ஆர்.குணசேகரன், செயலாளர் பி.செந்தில்வேல்குமார் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அரசின் சுகாதாரத் துறைச் செயலர், இந்தியன் மெடிக்கல் அசோசியேசனின் தமிழ்நாடு தலைமை, திருச்சி மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கும் பரிந்துரைக் கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளனர்.

அந்தப் பரிந்துரைக் கடிதத்தில், "திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பெருகி வருவதால் மருத்துவர்களால் கையாள்வதில் தொய்வு நிலவுகிறது. இந்தியன் மெடிக்கல் அசோசியேசனின் முன்னணி மருத்துவர்கள் குழு இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை மாவட்டத்தில் அமல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x