Published : 20 Jul 2020 11:02 AM
Last Updated : 20 Jul 2020 11:02 AM
ஆடி அமாவாசை திருவிழாவுக்காக சதுரகிரி வந்த பக்தர்கள் அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். கூட்டத்தைக் கட்டுபடுத்த விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்க்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை,பெளர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில் இந்தக் கோயிலின் முக்கியத் திருவிழாவான லட்சக்கணக்கானோர் பங்குபெறும் ஆடி அமாவாசைத் திருவிழா இன்று கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் ஆடி, அமாவாசை திருவிழா நடைபெறாது எனவும் பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் எனவும், வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றின் காரணமாகவும் 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளதாலும் ஆடி அமாவாசையை முன்னிட்டுகூட சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் கோயில் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை, மாவுத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் கடந்த 19-ம் தேதி முதல் வரும் 21-ம் தேதி வரை பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவினை மீறும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
கரோனா வைரஸ் எதிரொலியால் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா இன்று ரத்தான நிலையில் பக்தர்களின்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அடிவரப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.300-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT