Published : 20 Jul 2020 07:55 AM
Last Updated : 20 Jul 2020 07:55 AM
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர், பணியாளர்களுக்கு பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில் நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட 150 மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு வார தொடர் பணிக்குப் பிறகு இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆகமொத்தம், 14 நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு மற்ற வார்டுகளில் பணியில் ஈடுபடும்போதுதான் இவர்களால் தங்கள் குடும்பத்தினரை காண முடியும்.
இந்நிலையில் மருத்துவர்களுக்கும் செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில் நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறும்போது, “அனைவரும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். ஆனால், மருத்துவர்களுக்கு ஒரே நாளில் பரிசோதனை முடிவுகளை தெரிவிக்கும் நிர்வாகத்தினர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு 2-ம் நாளில்தான் முடிவுகளை தெரிவிக்கின்றனர். இதனால் பலர் மன உளைச்சலோடு இருக்க வேண்டிய நிலை உள்ளது. எங்களது உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது. உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, இது தவறான தகவல் எனக் கூறி மறுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT