Published : 19 Jul 2020 12:34 PM
Last Updated : 19 Jul 2020 12:34 PM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமங்களில் விவசாயிகள் மருத்துவ குணம் நிறைந்த மிதி பாகற்காய் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.
புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை, ஆலம்பாடி பூதவராயன்பேட்டை, வத்தராயன்தெத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மருத்துவ குணம் கொண்ட மிதி பாகற்ககாய் சாகுபடி செய்கிறார்கள். சம்பா சாகுபடி நெல் அறுவடைக்குப் பிறகு வயலில் பாகற்காயை விதைப்பு செய்கிறார்கள்.
மிகவும் சிறியதாக இருக்கும் இந்த மருத்துவ குணம் நிறைந்த மிதி பாகற்காயை இக்கிராம விவசாயிகள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக பயிர் செய்து வருகின்றனர். விதைப்பு செய்த முதல் மாதத்திலிருந்து மூன்றாவது மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிறது மிதி பாகற்காய். தொடர்ச்சியாக ஆறு மாதம் வரை அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் தருகிறது. நெல்லைவிட அதிக லாபம் தருவதால் இதனை அனைவரும் விரும்பி பயிர் செய்து வருகிறார்கள். மருத்துவக்குணம் நிறைந்த இந்த பாகற்காய் நீரிழிவு நோய், ரத்தத்தை சுத்திகரித்தல் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகளுக்கு மருந்தாக இருக்கிறது. இதனை அனைவரும் வாங்கி செல்லும் பொருளாக உள்ளது.
இப்பகுதியில் விளையும் மிதி பாகற்காய் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்து வருகிறார்கள். கிலோ ரூ.40-லிருந்து ரூ.50 வரை விற்பனையாகிறது. மேலும், இப்பகுதியில் இருக்கும் பலரும் விவசாயிகளிடமிருந்து இதனை வாங்கி சாலையோரம் வைத்து படி கணக்கில் விற்பனை செய்து வருகிறார்கள். இது இப்பகுதி விவசாயிகளுக்கு பணப்பயிராக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இது குறித்து மிதி பாகற்காய் விவசாயம் செய்யும் விவசாயிகள் கூறுகையில், "சம்பா பருவத்தில் நெல் அறுவடை முடிந்த பிறகு அந்த நிலத்தில் பாகற்காய் விதையை விதைத்து விவசாயம் செய்து வருகிறோம். குறைந்த செலவில் நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுவும் எங்கள் வாழ்வாதாரத்தைக் காத்து வருகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT