Published : 17 Jul 2020 07:04 PM
Last Updated : 17 Jul 2020 07:04 PM
மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் 20-ல் பட்ஜெட் தாக்கலாகிறது. இதை சபாநாயகர் சிவக்கொழுந்துவும் உறுதி செய்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 30-ம் தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்கு ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால பட்ஜெட்டுக்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஜூன் 30-ம் தேதிக்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்தது. இதற்காக ரூ.9,500 கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்த மத்திய அரசு ஒப்புதலுக்கு புதுவை அரசு அனுப்பியது. ஊரடங்கால் மாநில வருவாய் குறைவை சுட்டிக்காட்டி மதிப்பீட்டை குறைத்து அனுப்பும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதனையடுத்து, புதுவை அரசு ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து அனுமதிக்காக அனுப்பி வைத்தது. ஆனால், இதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வந்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர் புதுவை அரசு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து, புதுவை அரசு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கரோனா பரவலால் வழக்கம்போல இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை நீண்ட நாட்கள் நடத்த முடியாது. இதனால் 2 நாட்கள் மட்டும் கூட்டத்தை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை அலுவல் குழு கூடி முடிவெடுக்க உள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் சிவக்கொழுந்து இன்று (ஜூலை 17) மாலை கூறுகையில், "புதுச்சேரியில் வரும் 20-ம் தேதி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது" என்று உறுதி செய்தார்.
பட்ஜெட் தொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, "வரும் 20-ம் தேதி திங்கள்கிழமை சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அன்றைய தினம் மதியம் 12 மணியளவில் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இத்துடன் அன்றைய அலுவல்கள் முடிவடைகிறது.
தொடர்ந்து மறுநாள் 21-ம் தேதி ஒட்டுமொத்தமாக பட்ஜெட் மீது விவாதம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து மின்துறை தனியார்மய நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி அரசு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அன்றைய தினத்துடன் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்று சபை நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே சனிக்கிழமை மாலை அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு இறுதி வடிவம் கொடுப்பது, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்" என தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெறுவதால் மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். அதையடுத்து ஆட்சியமைக்கும் அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
தற்போது ஆட்சியிலுள்ள முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது ஆட்சி காலத்தில் இறுதி பட்ஜெட்டை இம்முறை தாக்கல் செய்கிறது
இறுதி பட்ஜெட் என்பதாலும், தேர்தல் வரவுள்ளதாலும் பல்வேறு சலுகைகளை அரசு பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT