Published : 17 Jul 2020 06:57 PM
Last Updated : 17 Jul 2020 06:57 PM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கவும், நுரையீரல் சுவாசப் பிரச்சினைகளை போக்கவும் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் இன்று (ஜூலை 17) வரை 1,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,065 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
எஸ்எம்எஸ் மூலம் முடிவு
தமிழகத்தில் முதல் முறையாக கரோனா பரிசோதனை முடிவுகளை உரிய நபர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கும் முறை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவை ஒவ்வொருவரின் செல்போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுவதால் அவர்களுக்கு ஏற்படும் தேவையில்லாத மன அழுத்தமும் தவிர்க்கப்படுகிறது.
கரோனா பராமரிப்பு மையங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்காடு மகாலட்சுமி கலைக் கல்லூரி, கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி என நான்கு வளாகங்கள் கரோனா பராமரிப்பு மையம் செயல்படுகிறது. இந்த மையங்களில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இயற்கை மருத்துவ சிகிச்சை
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாவது தெரியந்துள்ளது. நுரையீரல் பாதிப்பு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமடைகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாசப்பாதையை சீராக வைக்கவும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையை அளிக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் கல்லூரியில் செயல்படும் கரோனா பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் யோகா பயிற்சியுடன் இயற்கை மருத்துவ சிகிச்சையான நறுமண சிகிச்சை, நீராவி பிடித்தல், சூரியக்குளியல், அக்குபிரஷர் சிகிச்சை, சிரிப்பு பயிற்சி, சிரமம் இல்லாமல் தூங்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கரோனா பராமரிப்பு மையத்தில் சிகிச்சை அளித்துவரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவர் சசிரேகாவிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை பிரிந்து தனிமை சூழ்நிலையில் சிகிச்சை பெறுவதால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் கரோனாவால் ஏற்படும் நுரையீரல் சுவாசப் பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் சிகிச்சை அளிக்கிறோம்.
தியானம், மூச்சுப் பயிற்சியுடன் எலுமிச்சை, யூக்கலிப்டஸ் உள்ளிட்ட எண்ணெய்கள் அடங்கிய நறுமண சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைட்டமின்-டி-ஐ அதிகரிக்க சூரிய உதய நேரத்தில் மாடியில் அனைவரையும் அமர வைத்து தியானப் பயிற்சி அளிக்கிறோம். சுவாசப் பிரச்சினை இல்லாமல் உறங்கும் முறைகள் குறித்தும் விளையாட்டுப் பயிற்சியும் அளிக்கிறோம்.
வாலாஜா அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் அளித்த சிகிச்சை முறைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கரோனா பராமரிப்பு மையங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய விஷயங்களை அனைவரும் கடைபிடித்தால் போதும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT