Published : 16 Jul 2020 08:52 PM
Last Updated : 16 Jul 2020 08:52 PM
டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பள்ளிகள் சங்கத்தலைவர் சோம.சங்கர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் மூடப்பபட்ட தட்டச்சுப் பள்ளிகள் இன்னும் மூடியே இருக்கின்றன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தட்டச்சுப் பள்ளிகள் இயங்கினால் தான் அரசுப் பணிக்கு தகுதியான தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்களை உருவாக்க முடியும். எனவே, தட்டச்சுப் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தட்டச்சுப் பள்ளிகள் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வருகிறது. அதனால் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் போது, தட்டச்சுப் பள்ளிகளை ஏன் திறக்கக்கூடாது? தட்டச்சுப் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு 3 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT