Published : 16 Jul 2020 03:31 PM
Last Updated : 16 Jul 2020 03:31 PM

திருப்போரூர் திமுக எம்எல்ஏ மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுக: திமுக தீர்மானம்

திமுக கூட்டத்தின்போது அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை

திருப்போரூர் திமுக எம்எல்ஏ மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 16), திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக, சிறிதும் இரக்கமின்றி திசைதிருப்பி விமர்சித்ததாக முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்போரூர் திமுக எம்எல்ஏ மீதான வழக்கு பொய்யானது என்று அதிமுக அரசைக் கண்டித்துள்ளது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக விரைந்து நீதி கிடைக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளாகி மனித உரிமைகளை மண்ணில் புதைத்து, கொடூர மனங்கொண்டு ஏற்படுத்தப்பட்ட கொலைவெறிக் காயங்களால் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலைகளை, உடல்நலக்குறைவு, மூச்சுத் திணறல் என்றெல்லாம், உள்நோக்கத்துடன் சிறிதும் இரக்கமின்றி திசைதிருப்பி விமர்சித்த முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சிபிஐ விசாரணை நடைபெற்று வருகின்ற வேளையில், குற்றம் புரிந்தவர்களும், அந்தக் குற்றத்தைத் திரையிட்டு மறைக்கக் காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, தாமதம் இல்லாமல் தக்க தண்டனை வழங்கப்பட்டு, நீதி - நியாயம் - நேர்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றும் காவல் நிலைய மற்றும் நீதிமன்றக் காவல் மரணங்கள், இனிமேலாவது ஏற்பட்டுவிடாமல் இருக்க விரிவானதொரு பரிந்துரையை மாநில சட்ட ஆணையத்திடமிருந்து பெற்று, அதன் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும் இக்கூட்டம் அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

திருப்போரூர் திமுக எம்எல்ஏ மீதான பொய் வழக்குக்குக் கண்டனம்! புலனாய்வை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுக!

திருப்போரூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் தனது நிலத்தை பாதுகாக்கப் போராடவில்லை; மாறாக, 'கோயில் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்ற ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தட்டிக் கேட்டார்.

மக்களின் கோரிக்கைக்காகச் சென்றவரையும், அவரது தந்தையையும், அப்பகுதி மக்களையும் வெளியூரில் இருந்து வந்த கூட்டிவரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அதிமுக முக்கிய பிரமுகரின் துணையோடு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு, சட்டப்பேரவை உறுப்பினர், அவரது தந்தை, அவருடன் சென்ற ஊர்மக்கள் அனைவர் மீதும் பயங்கரத் தாக்குதல் நடத்தி, கொடுங்காயங்கள் விளைவித்து அவர்களது வீடுவரை விரட்டிச் சென்று அழிம்பு செய்தபோது ஆபத்தான நிலையில், தற்காப்புக்காக எம்எல்ஏவின் தந்தை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதை மறைத்து, தவறாக எம்எல்ஏ மீதே பொய் வழக்குப் பதிவு செய்து, திமுகவின் நற்பெயரைக் கெடுக்க காவல்துறையைப் பயன்படுத்தியுள்ள அதிமுக அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் நேர்மையான புலனாய்வை நடத்த இதுவரை தவறி, அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்குத் துணை நிற்பதால், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு திமுக கூட்ட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x