Published : 15 Jul 2020 07:30 AM
Last Updated : 15 Jul 2020 07:30 AM
கிருஷ்ணகிரியில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.
இதுகுறித்து ஆட்சியர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது. அதற்காக, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (15-ம் தேதி) அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்தாய்வு செய்ய உள்ளார். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று மேம்பாலம் திறப்பு
சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று (15-ம் தேதி) மாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.
சேலத்தில் இருந்து சித்தர் கோயில் வழியாக இளம்பிள்ளைக்கு செல்ல காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.
இதை தடுக்க கந்தம்பட்டியில் ரூ.33 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று மாலை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். மேலும், விழாவில் அயோத்தியாப்பட்டணம்-பேளூர் கிளாக்காடு இடையே ரூ.3.7 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT