Published : 14 Jul 2020 07:37 AM
Last Updated : 14 Jul 2020 07:37 AM
நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டதாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகிகள் உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மன், திருப்போரூர் அருகேசெங்காடு கிராமத்தில் வசிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமாருக்கு செங்காடு கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலத்துக்கு பாதை அமைக்க, குமார் தரப்பினர் கடந்த 11-ம் தேதி டிராக்டர், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்டோருடன் அந்தஇடத்துக்கு சென்றனர். இதற்கு இதயவர்மன் எம்எல்ஏ மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி எதிர்ப்புதெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்உருவானது. அரிவாள், கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இதயவர்மன் எம்எல்ஏ தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை நோக்கி சுட்டார். இதில், 2 குண்டுகள் காரில் பட்டன. ஒரு குண்டு அந்த வழியாக சென்ற கீரை வியாபாரி சீனிவாசனின் கையில் பட்டது. இதில் அவர் காயம் அடைந்தார். குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். துப்பாக்கியால் சுட்டதாக இதயவர்மன் எம்எல்ஏவை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து செங்காடு கிராமபொதுமக்கள் நேற்று காலைசெய்தியாளர்களிடம் கூறும்போது,“குமார்தான் தனது ஆதரவாளர்களுடன் வந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டார். அப்போது எம்எல்ஏ மீது காரை ஏற்ற முயன்றனர். அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளத்தான் காரை நோக்கி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டார்.குமார் தரப்பில் இருந்தும் துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கியால் சுட்டதாக இதயவர்மன் எம்எல்ஏவை போலீஸார் கைது செய்ததை அடுத்து, எம்எல்ஏவின் துப்பாக்கியை மட்டுமே செய்தியாளர் சந்திப்பில் போலீஸார் காட்டினர். ஆனால், சம்பவ இடத்தில் குமார் தரப்பினர் விட்டுச்சென்ற அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றிய போலீஸார் அதை ஏன் செய்தியாளர்களிடம் காட்டவில்லை. குமார் மற்றும் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும்” என்றனர். மேலும், இதுதொடர்பாக திருப்போரூர்காவல் நிலையத்தில் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
‘இதயவர்மன் எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டது உறுதிபடுத்தப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டார். அதேபோல், குமார் தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டதாக எம்எல்ஏ தரப்பில் புகார்அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குமார் தரப்பினரிடம் துப்பாக்கி இருந்ததற்கான தடயங்கள் இல்லை. ஆனாலும், புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று திருப்போரூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் குமார் மீதும் கொலை முயற்சி, கலவரம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல், ஆயுதத்தை தவறாகப் பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின்கீழ் திருப்போரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், வன்முறை சம்பவத்தில் இதயவர்மன் எம்எல்ஏவுக்கு உதவி செய்ததாக திருக்கழுக்குன்றம் திமுக நிர்வாகி யுவராஜ் உட்பட 11 பேரை திருப்போரூர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT