Published : 10 Jul 2020 07:13 AM
Last Updated : 10 Jul 2020 07:13 AM
கல்லணையில் தண்ணீர் திறக்கப் பட்டு 25 நாட்களாகியும், திருவை யாறு அருகே குடமுருட்டி ஆற்றுப் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், காய்ந்து வரும் நாற்றங்கால்களைக் காப்பாற்ற விவசாயிகள் அடிபம்பிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றி வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த ஜூன் 16-ம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து 25 நாட்களைக் கடந்துவிட்ட நிலையிலும், திருவையாறை அடுத்த திருப்பூந்துருத்தி, கண்டி யூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களில் இன்னும் தண்ணீர் வரவில்லை.
இந்நிலையில், இப்பகுதியில் குறுவை சாகுபடிக்காக தயாரிக்கப்பட்டுள்ள நாற்றங் கால்களில் விதைவிட்டு 15 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், பயிர்கள் வளரும் நிலையில் உள்ளன. ஆனால், தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் வயல்பகுதி வெடித்து, நாற்றங்கால்கள் காய்கின்றன. அந்த வகையில், இப்பகுதியில் 50 ஏக்கரில் நாற்றங்கால்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், கடந்த 3 நாட்களாக விவசாயிகள், ஒரு கிலோ மீட்டர் தொலைவில், கண்டியூர்- திருப் பூந்துருத்தி பிரதான சாலையில் உள்ள அடிபம்பில் இருந்து குடம், வாளிகளில் தண்ணீர் நிரப்பி கொண்டுவந்து, நாற்றங்கால்களில் ஊற்றி பயிரைக் காப்பாற்றி வரு கின்றனர்.
இதுகுறித்து கண்டியூர் விவ சாயிகள் கூறியதாவது:
கண்டியூர் வாய்க்காலின் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை நம்பி நகைகளை அடகுவைத்து, விதைநெல்லை வாங்கி தெளித்து உள்ளனர். அவற்றைக் காப்பாற்ற வாய்க்காலில் தண்ணீர் வரும் என நம்பியிருந்தோம்.
ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டு 25 நாட்களாகியும் வந்துசேரவில்லை. இதனால், நாற்றங்கால்கள் தண்ணீரின்றி காய்ந்து, வெடித்து வருகின்றன. வாய்க்காலில் தண்ணீர் வராத நிலையில், என்ன செய்வதென்று புரியாமல் தவித்துவருகிறோம்.
தற்போதைக்கு நாற்றங் காலைக் காப்பாற்றுவதற்காக அடிபம்பிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றுகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT