Published : 05 Jul 2020 06:45 PM
Last Updated : 05 Jul 2020 06:45 PM
திருச்சி சரகத்திலுள்ள 5 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து காவல் அதிகாரிகள், காவலர்கள் தன்னிடம் தெரியப்படுத்தி தீர்வு காணலாம் என டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 5) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்காக காவல்துறையினர் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றைப் பார்வையிடுவதற்காக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா இன்று காலையில் சைக்கிள் மூலம் புறப்பட்டார்.
திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் குண்டூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியைப் பார்வையிட்ட அவர், பின்னர் திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாத்தூர் சோதனைச்சாவடியிலும் ஆய்வு செய்தார். அப்போது அவ்வழியாக வந்தவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும், மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்காகச் செல்வோரை மட்டும் அனுமதிக்குமாறு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாத்தூர் காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு சென்றார்.
காரில் செல்லாமல், சீருடை அணியாமல், பாதுகாப்புக்கான ஆயுதப்படை போலீஸார் இல்லாமல் சாதாராண நபர் போல சைக்கிளில் சென்றதால், டிஐஜியை காவல்துறையினரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. டிஐஜி என அவராக அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகே, சோதனைச்சாவடிகளில் காவல்துறையினர் சுதாரித்துக் கொண்டு பதிலளித்துள்ளனர். பின்னர் சைக்கிளிலேயே அவர் மீண்டும் திரும்பி வந்தார். இதன் மூலம் ஆய்வுக்காக அவர், சுமார் 25 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.
இதுகுறித்து டிஐஜி ஆனி விஜயா 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியபோது, "முழு ஊரடங்கினை பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா, காவல்துறையினர் தங்களது பணியை முழுமையாக மேற்கொண்டுள்ளனரா என்பதைப் பார்வையிடுவதற்காக சைக்கிளில் ஆய்வுக்குச் சென்றேன்.
அப்போது அங்கு பணியிலிருந்த காவல்துறையினரிடம், பொதுமக்களிடம் காவல்துறையினர் நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும். பண்புடனும், அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. பணியிடங்களில் ஏற்படக்கூடிய சில அழுத்தங்கள்கூட, கோபத்தைக் வெளிக்காட்டச் செய்துவிடும். எனவே, பொதுமக்கள் மட்டுமல்ல. காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் தயக்கமின்றி என்னைச் சந்திக்கலாம்.
சில இடங்களில் சப் இன்ஸ்பெக்டருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் பிரச்சினை இருக்கலாம் அல்லது இன்ஸ்பெக்டருக்கும் டிஎஸ்பிக்கும் பிரச்சினை இருக்கலாம் அல்லது காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒத்துவராமல் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவர்கள் என்னைச் சந்தித்து தெரியப்படுத்தி, தீர்வு காணலாம்.
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் காவல்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' குழுவினரை தற்போது காவல் நிலையம் சார்ந்த எந்தப் பணிக்கும் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும்காலத்தில் தேவையான பயிற்சி அளித்த பிறகு வேண்டுமெனில், அவர்களை மீண்டும் பயன்படுத்தும் நிலை வரலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT