Published : 05 Jul 2020 12:00 PM
Last Updated : 05 Jul 2020 12:00 PM
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவலர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.
சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக கலங்காபேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (42) பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது.
இந்நிலையில், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கடந்த 2-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (ஜூலை 5) அதிகாலை காவலர் அய்யனார் உயிரிழந்தார்.
இதையடுத்து, சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காவலர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து தான் பணியாற்றி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்த முதல் காவலர் அய்யனார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் குழந்தை 6-ம் வகுப்பும் இரண்டாவது ஆண் குழந்தை 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
காவலர் இறப்பு ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து காவலர்கள் மத்தியில் மிகுந்த பயத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT