Published : 04 Jul 2020 05:53 PM
Last Updated : 04 Jul 2020 05:53 PM
திருச்சி மாநகரில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிக்காக 65 வார்டுகளுக்கும் தலா 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, திருச்சியில் இன்று (ஜூலை 4) அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தலா 10 பேரைக் கொண்ட 65 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் மாநகரிலுள்ள 65 வார்டுகளில், அவரவருக்கு ஒதுக்கப்படும் வார்டுகளில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபடுவர். இதற்கான பயிற்சி தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. மாநகரில் பொதுமக்களுடனான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனக் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் சற்று கடுமையாக நடந்து கொள்ளக்கூடிய சுமார் 25 காவலர்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டு. அவர்களுக்கு நடத்தை தொடர்பான வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலர்கள் கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் தற்போது 5 காவலர்கள் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது".
இவ்வாறு காவல் ஆணையர் ஜே.லோகநாதன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT