Published : 03 Jul 2020 08:58 PM
Last Updated : 03 Jul 2020 08:58 PM
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணிபுரிகிறார் டி.வேதநாயகி.
இவரது பெயர் 2019 ஆண்டுக்கான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க மறுத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி வேதநாயகி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இவரைப்போல் பெண் அரசு ஊழியர்களும் பலரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிடுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் பிரிவு 12-ல் விடுமுறை பதவி உயர்வுக்கு தடையாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதை பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன் பிறகும் மனுதாரர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், பணிக்காலத்தில் தான் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர்.
இதனால் மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும். மனுதாரரின் பெயரை 31.7.2020-க்குள் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT