Last Updated : 03 Jul, 2020 02:29 PM

1  

Published : 03 Jul 2020 02:29 PM
Last Updated : 03 Jul 2020 02:29 PM

பைலட் பயிற்சிக்காக சேமித்த பணத்தில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவும் தேனி மாணவி உதயகீர்த்திகா

தேனி

விண்வெளி வீராங்கனையாவதற்கு பைலட் பயிற்சி பெற சேமித்து வைத்திருந்த ரூ.4 லட்சத்தை தேனி மாணவி ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களாக வழங்கி வருகிறார்.

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரனின் மகள் உதயகீர்த்திகா. இவருக்கு விண்வெளி வீராங்கனையாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். இவர் 10-வது படித்த போது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளியின் பங்கு என்ற தலைப்பில் நடந்த இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதே போல் 12-ம் வகுப்பிலும் முதலிடம் பெற்றதால் இஸ்ரோ செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பின்பு உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிடி என்ற அந்நாட்டு விமானப்படைப் பல்கலைக்கழகத்தில், "ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் " என்ற நான்காண்டு கால சிறப்புப் பொறியியல் கல்வியை முடித்தார்.

தொடர்ந்து போலந்து நாட்டில் உள்ள அனலாக் விண்வெளி பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 பேரில் இந்தியா சார்பில் சென்ற ஒரே நபர் இவர்தான்.

தனது கனவான விண்வெளி வீரராக பைலட் பயிற்சி அவசியம் என்பதை அறிந்தார். இதற்கான நுழைவுத்தேர்வை எழுத தற்போது டெல்லியில் பயிற்சி பெற்று வருகிறார். மூன்று மாத பயிற்சியில் தற்போது ஒரு மாதம் முடிந்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

எனவே பயிற்சி நிறுவனம் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் சொந்த ஊரான தேனிக்கு வந்து விட்டார்.

கரோனாவினால் வேலையையும், வருமானத்தையும் இழந்து உணவுக்கே கஷ்டப்படுகிற பலரையும் பார்த்தவர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். இதற்காக பைலட் பயிற்சி பெற சேமித்து வைத்திருந்த ரூ.4லட்சம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறார்.

தேனி முல்லைநகர் தூய்மைப் பணியாளர்கள், நரிக்குறவர் காலனி என்று ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விளிம்புநிலை குடும்பங்கள், கரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டறிந்து உதவிகளை செய்து வருகிறார்.

இது குறித்து உதயகீர்த்திகா கூறுகையில், எனது குடும்பமும் ஏழ்மையானதுதான். பலரின் உதவியால் விண்வெளி வீராங்கனைக்கான பல பயிற்சிகளை பெற்றுள்ளேன். தற்போது கரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களை பார்க்க கஷ்டமாக உள்ளது. எனவே ஒரு குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட 14 வகை மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறேன்.

அடுத்ததாக கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வழங்க இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x