Published : 03 Jul 2020 08:25 AM
Last Updated : 03 Jul 2020 08:25 AM
என்எல்சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி 2-வது அனல் மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் நேற்று முன்தினம் கொதிகலன் வெடித்து 6 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு இழப்பீடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், நிரந்தர பணி வழங்கக் கோரி உறவினர்களும், கிராம மக்களும் அனல் மின் நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நெய்வேலி இல்லத்தில் என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு தர நிர்வாகம் முன் வந்தது. ஆனால், ஆந்திரா விபத்தில் உயிரிழந்தோருக்கு வழங்கியது போல ரூ.1 கோடி நிவாரணம், நிரந்தர வேலை வழங்க வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூறினர். இந்தக் கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை.
இதற்கிடையில், உரிய நிவாரணம் வழங்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் எனக் கூறி, என்எல்சி 2-வது அனல் மின் நிலைய வாயிலை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று சுமார் 6 மணி நேரம் தொடர்ந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.30 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தர முடிவானது.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்குவதுடன், அவர்களின் மருத்துவ செலவை என்எல்சி இந்தியா நிறுவனம் ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT