Published : 02 Jul 2020 06:58 PM
Last Updated : 02 Jul 2020 06:58 PM
தவறிழைக்கும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அதைவிடுத்து பொதுமக்களை அடிப்பதோ, நூதன தண்டனை வழங்கும் செயலில் ஈடுபடுவதோ கூடாது என சேலம் சரக காவல் துணைத் தலைவர் பிரதீப்குமார் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஜூலை 2) கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சேலம் சரக காவல் துணைத் தலைவர் (டிஐஜி) பிரதீப்குமார் தலைமை வகித்துப் பேசியதாவது:
"காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்கள் பொதுமக்களிடம் மரியாதையாக பேச வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபடக் கூடாது. தேவையற்ற அநாவசியமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் வாகனங்களை துரத்திச் சென்று பிடிக்கக் கூடாது.
தவறிழைப்போர் மீது சட்டப்பூர்வமான வகையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் எவரையும் அடிப்பதோ, நூதன தண்டனை வழங்கும் செயலில் ஈடுபடுவதோ கூடாது. மனு விசாரணையை நியாயமாகவும், விரைந்தும் முடிந்த வரையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நடத்த வேண்டும். உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி காவல்துறைக்கு கலங்கம் ஏற்படாதபடி நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னிலை வகித்து வரவேற்றார். காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT