Published : 02 Jul 2020 03:41 PM
Last Updated : 02 Jul 2020 03:41 PM
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் கடைகள், தொழில் நிறுவனங்களை மாலை 5 மணியோடு மூட உத்தரவிட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் மட்டும் வழக்கம்போல் இரவு 8 மணிவரை செயல்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துக் குமரி மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் சுரேஷ்குமார் ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து இ- பாஸ் பெற்றுக் குமரி மாவட்டத்துக்கு வருபவர்களை மாவட்ட எல்லையான ஆரல்வாய் மொழியிலேயே தடுத்து நிறுத்திப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து கன்னியாகுமரியில் தங்கவைக்கப்படும் அவர்கள் பாசிட்டிவ் என்றால் அங்கிருந்து நேரே அரசு மருத்துவமனைக்கும், நெகட்டிவ் என்றால் மட்டுமே வீடுகளுக்கும் அனுமதிக்கப் படுகிறார்கள். அதிலும் கரோனா தொற்று இல்லாவிட்டாலும் வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் வீடுகளுக்கே வந்து வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்து கண்காணிப்பதிலும் கவனமாக உள்ளனர்.
இதேபோல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவது உள்ளிட்ட விஷயங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு திருப்தியாகவே இருந்தது. கரோனா தொற்றின் தொடக்கத்தில் இருந்தே மாவட்ட நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜூலை ஒன்று முதல் தமிழகம் முழுவதுமே பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் அதோடு கூடவே அதுவரை இரவு 7 மணிவரை திறக்கப்பட்ட கடைகளை, மாலை 5 மணியுடன் அடைத்திட உத்தரவிட்டது.
அதன்படி உணவகங்களைத் தவிர மற்ற அனைத்து வகை கடைகளையும் காலை 6 மணிக்குத் திறந்து, மாலை 5 மணிக்குள் அடைத்துவிட வேண்டும். ஆனால் குமரியில் டாஸ்மாக் கடைகள் மட்டும் இரவு 8 மணி வரை வழக்கம் போலவே திறந்திருக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பெயர் அளவுக்குக்கூட இல்லை. ஒரு சின்ன துவாரத்தின் வழியே ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தினமும் நூற்றுக்கும் அதிகமான கைகள், மது வகைகளை வாங்கச் சென்று வருகின்றன. இப்படியான சூழலில் டாஸ்மாக் கடையையும் 5 மணிக்கே மூடுவதுதான் தொற்றுப் பரவலைத் தடுக்க ஒரே வழி.
மாவட்ட நிர்வாகத்தின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து அனைத்து வகைக் கடை உரிமையாளர்களும் மாலை 5 மணிக்குக் கடையைப் பூட்டுகிறார்கள். பிழைப்புக்கு வழி சொல்லும் வர்த்தக நிறுவனங்களை 5 மணிக்கே அடைக்கச் சொல்லிவிட்டு கரோனா பரவலுக்குக் காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மட்டும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT