Published : 01 Jul 2020 03:34 PM
Last Updated : 01 Jul 2020 03:34 PM
கரோனா பொது முடக்கத்தால் ரயில்கள் இயங்கவில்லை. இதனால் ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிக்கட்டுவதற்காகப் பல்வேறு விதி முறைகளை ரயில்வே துறை செயல்படுத்தி வருகின்றது. இதன்படி, 200 கி.மீ. தூரத்துக்கு மேல் இயங்கும் பயணிகள் ரயில்கள் அனைத்தையும் விரைவு ரயில்களாக மாற்றம் செய்வதாகவும் அறிவித்தது.
இது பயணிகள் மத்தியில் சுமையை ஏற்படுத்துவதோடு, சில ரயில்வே ஸ்டேஷன்களையே நிரந்தரமாக மூடவைத்து விடும் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆதங்கப்படுகிறார்கள்
இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் இரவு நேரப் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று கரோனாவுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜூலை 1-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும் என முன்பதிவும் தொடங்கியது. இந்த ரயில்தான் தெற்கு ரயில்வே மண்டலத்துக்குள் இரவு நேரத்தில் முன்பதிவு இருக்கைகளுடன் இயங்கி வந்த ஒரே பயணிகள் ரயில். இது இப்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுவிட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் நாகர்கோவில் - கோயம்பத்தூர் பகல் நேரப் பயணிகள் ரயில் , கோவை – மங்களுர் பயணிகள் ரயில், காரைக்கால் - பெங்கல்ளூரு பயணிகள் ரயில் ஆகியவையும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது பயணிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
தற்போது ரயில்வே துறை அகில இந்திய அளவில் 200 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் விரைவு ரயில்களாக மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயில் இந்த அறிவிப்பின்படி விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட இருக்கின்றது.
பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றம் செய்யும்போது பயண கட்டணம் அதிகரிக்கும். ரயில்களின் வேகம் அதிகரித்தாலும், இதனால் மக்கள் பொருளாதார ரீதியாகக் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். இப்படி இயக்குவதால் சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. படிப்படியாக ரயிலின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறைக்கப்பட்டு கால அட்டவணையிலும் மாற்றம் வரும். முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும். ரயில்களை நீட்டிப்பு செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் கூடுதல் ஊர்களுக்கு ரயில் இணைப்பு கிடைப்பதோடு ரயில்பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும். ஆனால், இதில் இருக்கும் சிரமங்களையும் நாம் பரிசீலிக்கவேண்டும். பயணக் கட்டணம் அதிகரித்து எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். போதிய வருவாய் இல்லை என்று கூறி சிறிய ரயில் நிலையங்களின் நிறுத்தங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் இருக்கிறது. ரயில் நிறுத்தங்களை ரத்து செய்வதால் போதிய வருவாய் இல்லை என்று கூறி ஒரு சில ரயில் நிலையங்கள் மூடப்படலாம். சிறிய கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படலாம் .
இந்த ரயில்களில் அதிகக் கட்டணம் இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையவும் வய்ப்பிருக்கிறது. 200 கிலோ மீட்டர் தூரத்துக்கும் குறைவான தூரத்தில் செல்லும் ரயில்களை சேர்த்து இணைப்பு ரயிலாக்கியோ, கூடுதல் தூரத்துக்கு நீட்டிப்பு செய்தோ விரைவு ரயிலாக மாற்றிக் கட்டணத்தைக் கூட்டும் வாய்ப்பும் இருக்கிறது.
மக்கள் கரோனாவால் அடியோடு வருமானத்தை இழந்திருக்கும் நிலையில் ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை சாமானிய மக்களை வெகுவாகப் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு அரசும், ரயில்வே துறையும் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT