Published : 01 Jul 2020 12:35 PM
Last Updated : 01 Jul 2020 12:35 PM
சாத்தான்குளம் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தடை செய்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று (ஜூலை 1) பார்வையிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:
"சாத்தான்குளத்தில் நிகழ்ந்தது, நடக்கக்கூடாத ஒரு நிகழ்வு. என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்திய நிகழ்வு. இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி என்னிடம் தெரிவித்தார். சாத்தான்குளம் விவகாரம் ஒரு உணர்வுபூர்வமான விஷயம். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது.
தமிழகத்தில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஏற்கெனவே அறிவித்தபடி நடைமுறைக்கு வர உள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தவர் தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருந்தால் அவர்கள் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
எனது குடும்பத்தினர் மற்றும் என்னைச் சேர்ந்த 32 நபர்கள் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை".
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT