Published : 29 Jun 2020 08:35 PM
Last Updated : 29 Jun 2020 08:35 PM
சேலம் அருகே சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கை செய்த போலீஸாரிடம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜூனன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியது சம்பந்தமாக சூரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று (ஜூன் 28) போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்.பி.யுமான அர்ஜூனன் காரை போலீஸார் தடுத்து நிறுத்தி, வாகனத் தணிக்கை செய்ய முயன்றனர். ஓமலூரில் உள்ள தோட்டத்துக்கு சென்று திரும்பியதாகவும், சொந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அர்ஜூனன் கூறியுள்ளார்.
இந்தப் பதிலை ஏற்காத போலீஸார் அவரைக் காரை விட்டு இறங்கும்படி கூறியுள்ளனர். இதில் போலீஸாருக்கும் அர்ஜூனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், அதிமுக பிரமுகர் அர்ஜூனன், போலீஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டல் விடுத்தும், பணியில் இருந்த போலீஸாரை எட்டி உதைக்க முயன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அதிமுக பிரமுகரான அர்ஜூனன், கடந்த காலத்தில் திமுகவில் இருந்தபோது எம்.பி.யாகவும், அதன்பின், அதிமுகவில் இரண்டு முறை சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். அதன்பின், அதிமுகவில் இருந்து விலகி தேமுதிகவுக்கும், தீபா பேரவையிலும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அர்ஜூனனின் மகன் சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சேலம் சூரமங்கலம் போலீஸார் முன்னாள் எம்எல்ஏ அர்ஜூனன் மீது பணியில் இருந்த போலீஸாரை பணி செய்யாமல் தடுத்தாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாக இபிகோ 294, 353 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அர்ஜூனனிடம் கேட்ட போது, "ஓமலூரில் உள்ள தோட்டத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது, கருப்பூர் சுங்கச்சாவடியில் எனது காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மஃப்டியில் இருந்தவர், 'காரை விட்டு இறங்கு' என ஒருமையில் பேசினார். முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.யாக இருந்துள்ளேன் என்று போலீஸாரிடம் பதில் அளித்தேன். ஆனால், அவர்கள் அதனை ஏற்க மறுத்து, இ-பாஸ் உள்ளதா என்று கேட்டனர். சொந்த மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று பதில் கூறினேன்.
அதற்குள் அங்கு வந்த போலீஸ் எஸ்எஸ்ஐ என்னைப் பார்த்து, 'முதலில் வண்டியில் இருந்து கீழே இறங்குடா', என்கிற ரீதியில் மிரட்டியதோடு, தரக்குறைவாகப் பேசியதால், கோபம் கொண்டு, அவர்களுடன் நானும் வாக்குவாதம் செய்ய நேரிட்டது. மஃப்டியில் இருந்த சிலரும், எஸ்எஸ்ஐ உடன் சேர்ந்து கொண்டு, என்னை அவமரியாதையாகப் பேசி மிரட்டினர். இதுசம்பந்தமாக சேலம் மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து, என்னை அவமரியாதை செய்து, மிரட்டிய போலீஸார் மீது புகார் கொடுக்கவுள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT