Published : 29 Jun 2020 02:43 PM
Last Updated : 29 Jun 2020 02:43 PM
சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, பொறுப்பைத் தட்டிக் கழிக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 28) அறிவித்தார்.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 29) தன் ட்விட்டர் பக்கத்தில், "சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி, பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் ஐபிசி 302-ன்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.
சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் எனக் காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி" எனப் பதிவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!
— Kamal Haasan (@ikamalhaasan) June 29, 2020
குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.
(1/2)
CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து,
— Kamal Haasan (@ikamalhaasan) June 29, 2020
மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள்.
காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.
(2/2)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT