Last Updated : 28 Jun, 2020 03:02 PM

 

Published : 28 Jun 2020 03:02 PM
Last Updated : 28 Jun 2020 03:02 PM

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் உயிரிழப்பு: மேலும் 38 பேர் பாதிப்பு 

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 303 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்ததில் 147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்று புதிதாக மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 341ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஒருவர் மாலத்தீவில் இருந்தும், ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும், ஒருவர் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள். மதுரை, சென்னையில் இருந்து வந்த தலா 2 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற 23 பேரும் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்ட கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலரின் வீடு உள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வட்டார வளர்ச்சி அலுவலருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி சேகரித்து சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த குருசாமி (77) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், வீட்டுக்குச் சென்ற குருசாமி உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குருசாமி சடலத்தை கடந்த 26-ம் தேதி தகனம் செய்துவிட்டனர்.

இந்நிலையில், ரத்த பரிசோதனை முடிவு நேற்று வந்ததில் குருசாமிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையினர் குருசாமியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, குருசாமி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிவிட்டது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

குருசாமியின் குடும்பத்தினர், உறவினர்கள், இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல், தேவிபட்டணத்தைச் சேர்ந்த ராஜதுரை (83) என்பவர், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராஜதுரை கடந்த 26-ம் தேதி உயிரிழந்துவிட்டார்.

அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில், ரத்த பரிசோதனை முடிவு நேற்று வந்ததில் ராஜதுரைக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் உயிரிழந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது தெரியவந்ததும் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x