Published : 26 Jun 2020 06:05 PM
Last Updated : 26 Jun 2020 06:05 PM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனாவுக்குச் சிகிச்சை என்ற பெயரில் கிராம மக்களைக் குறிவைத்து பணம் வசூல் செய்த 16 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25-க்கும் மேற்பட்ட கிளீனிக்குகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் போலி மருத்துவர்கள் கரோனாவுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் சார் ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட கரோனா தடுப்பு அதிகாரி பிரகாஷ் ஐயப்பன் தலைமையில் வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறையினருடன் இணைந்த 70-க்கும் மேற்பட்டோர் நான்கு குழுக்களாகப் பிரிந்து இன்று (ஜூன் 26) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளான அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, கலவை, திமிரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் உரிய கல்வித்தகுதி இல்லாமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக இதுவரை 16 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சோதனையின்போது பிரசவம், கருக்கலைப்பு உள்ளிட்டவற்றுக்கான மருத்துவ உபகரணங்களுடன் மருந்து மாத்திரைகளை வைத்திருந்ததையும் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் குழுவினர் வரும் தகவல் பரவியதால் பல போலி மருத்துவர்கள் கிளீனிக்கைப் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா ஊசிக்கு ரூ.500
இந்தச் சோதனையின்போது ஒரு சில கிளீனிக்குகளில் கரோனாவுக்கு ஊசி போட வந்திருப்பதாக பொதுமக்கள் சிலர் கூறியுள்ளனர். கரோனாவுக்கான ஊசி எனக்கூறி பொதுமக்களிடம் போலி மருத்துவர்கள் ரூ.500 வரை வசூல் செய்துள்ளதும் தெரியவந்தது. மக்களிடம் கரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் அதைப் பயன்படுத்தி போலி மருத்துவர்கள் இதுபோன்ற வசூலில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டது. இன்று பிற்பகல் வரை நடைபெற்ற சோதனையில் 16 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 25-க்கும் மேற்பட்ட கிளீனிக்கிற்கு சீல் வைக்கப்பட்டு மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT