Published : 26 Jun 2020 12:20 PM
Last Updated : 26 Jun 2020 12:20 PM
கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன யோசனையைத்தான் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது என, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே நோயை மையமாக் வைத்து அரசியல் செய்வது ஸ்டாலின் மட்டும்தான் என்று தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று (ஜூன் 25) கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் இன்று (ஜூன்25) விழுப்புரத்தில் திமுக முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் எம்எல்ஏவுமான பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"முதல்வர் நேற்று வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். ஸ்டாலின் அடிக்கடி சொல்வது என்னவெனில் 'கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்' என்பார். ஸ்டாலினைக் குறை சொல்ல முதல்வருக்கு அருகதை இல்லை. சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் புள்ளிவிவரத்தோடு சொல்லியுள்ளார். இவர் முதல்வராகத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியுள்ளார்.
ஸ்டாலின் எப்போதும் மக்களைத் திரட்ட ஆசைப்படுகிறார் என்கிறார். எந்த அரசியல் தலைவரும் மக்களைத் திரட்டப் பின்வாங்கியதில்லை. மக்களின் ஆதரவோடு முதல்வராக விரும்புகிறார். இவரைப் போல இல்லை. அவரின் வேடிக்கையான செய்தி என்னவெனில் நோய்ப் பரவலைத் தடுத்தி நிறுத்தியுள்ளதாகச் சொல்கிறார். கணக்குதான் தெரியவில்லை என்றால் அரசியலும், நிர்வாகமும் தெரியவில்லை. அரசு கொடுத்த அறிக்கையில் 3,000-க்கும் மேற்பட்டோர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது 'இந்நோயைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. தமிழகத்தில் இந்நோய் வராது' என்று தெரிவித்தார். இப்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார். சென்னையில் ஊரடங்கு இருக்காது என்றார். இரண்டே நாளில் ஊரடங்கு என்று அறிவிக்கப்படுகிறது.
ஸ்டாலின் என்ன யோசனை சொல்லியுள்ளார் என்று கேட்கிறார். 'சட்டப்பேரவையைக் கூட்டக்கூடாது, அனைவருக்கும் முகக்கவசம் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் ரூ.5,000 நிவாரணத் தொகை தர வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம், பிளஸ் 2 தேர்வு, பத்தாம் வகுப்பு தேர்வை நிறுத்த வேண்டும். நடமாடும் மருத்துவமனை வேண்டும்' என்று யோசனை சொன்னது ஸ்டாலின்தான். ஸ்டாலினின் சொன்ன யோசனையைத்தான் இந்த அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
அனைத்து மாநிலத்திலும் எதிர்க்கட்சித் தலைவருடன் விவாதிக்கிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் என்ன தவறு? எதிர்க்கட்சிகள் செய்வதைப் பாராட்ட வேண்டும். அதைத் தடுக்கக் கூடாது. மறைந்த ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தியாகம் செய்துள்ளார். முதல்வரின் உதவியாளர், ஓட்டுநருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைவருக்கும் நிவாரணம் அளித்தது திமுகதான். அதனால்தான் பயந்து ஏதோதோ உளறியுள்ளார். முதல்வர் தமிழைப் பேசக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு பொன்முடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT