Published : 25 Jun 2020 09:45 PM
Last Updated : 25 Jun 2020 09:45 PM
சின்ன வெங்காயம் விலை நிலையாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் மொத்த சின்ன வெங்காயம் உற்பத்தி மற்றும் நுகர்வில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, மதுரை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பாரம்பரியமாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தை, வைகாசி மற்றும் புரட்டாசி ஆகிய 3 பட்டங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் சேமித்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது தமிழக சந்தைகளுக்கு உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து காணப்படுகிறது. இதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள மைசூர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து காணப்படுகிறது. இது வழக்கமான வரத்தாகும்.
இம்மாத இறுதியில் மைசூர், சாம்ராஜ்பேட்டை பகுதிகளில் இருந்தும் வரத்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் சந்தை விலை கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை இருக்கம் என வர்த்தக மூலங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்நிலையில் சின்ன வெங்காயம் விலை நிலையாக இருக்கும் என்று முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் சின்ன வெங்காயம் விற்பனை குறித்த முடிவுகளை எடுக்க ஏதுவாக, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சின்ன வெங்காயம் விலை முன்னறிவிப்பு விவரம்:
“தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தையில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவிய சின்ன வெங்காயம் விலை நிலவரத்தை ஆய்வு செய்தது. வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.36 முதல் ரூ.38 வரை நிலையாகவே இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து சின்ன வெங்காயம் வரத்தைப் பொறுத்துப் பண்ணை விலையில் சிறு மாற்றம் இருக்கலாம். இதன் அடிப்படையில் விவசாயிகள் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT