Published : 18 Jun 2020 04:58 PM
Last Updated : 18 Jun 2020 04:58 PM
வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல்கள் மற்றும் கரோனா ஊரடங்கு, மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளை வெளிர்தல் பாதிப்பில் இருந்து பாதுகாத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகமுள்ள நான்கு இடங்களில் மன்னார் வளைகுடா பகுதியும் ஒன்றாகும். இங்குள்ள 21 தீவுகளை சுற்றி ஏராளமான பவளப்பாறை படுகைகள் உள்ளன. இங்கு 117 பவளப்பாறை இனங்கள் காணப்படுகின்றன. மீன்களில் முக்கிய வாழிடமாக பவளப்பாறைகள் இருப்பதால், இவைகள் மீனவர்களின் முக்கிய வாழ்வாதார பகுதிகளாக கருதப்படுகின்றன.
இங்குள்ள பவளப்பாறைகளில் ஆண்டு தோறும் கோடைகாலத்தில் கடல்நீரின் வெப்பநிலை உயர்வு காரணமாக வெளிர்தல் (Coral Bleaching) ஏற்படுகின்றன. சில ஆண்டுகளில் கடல் வெப்பநிலை மிக அதிகமாக ஏற்பட்டு பவளப்பாறைகள் இறந்து விடும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பவளப்பாறைகளில் வெளிர்தல் ஏற்படுவதும், ஆகஸ்ட் மாதத்தில் கடல் வெப்பநிலை குறைந்த பிறகு பவளப்பாறைகள் மீண்டும் புத்துயிர் பெற்று பழைய நிலைக்கு திரும்புவதும் வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெப்பநிலை உயர்வுக்கு ஏற்ப பவளப்பாறைகளில் வெளிர்தல் ஏற்படவில்லை. அதுபோல ஜூன் மாதமே பவளப்பாறைகள் வெளிர்தலில் இருந்து மீண்டெழுந்து பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு கூறியதாவது:
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் ஏ.எஸ்.மாரிமுத்து ஆலோசனையின் பேரில், வனச்சரக அலுவலர்கள் ஆர்.ரகுவரன், சிக்கந்தர் பாஷா, ஜி.வெங்கடேஷ் ஆகியோரது உதவியுடன் வனத்துறையினரும், சுதந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய பவளப்பாறை ஆராய்ச்சிக் குழுவினரும் மன்னார் வளைகுடாவில் உள்ள 11 தீவு பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டோம்.
ஏப்ரல் மாதத்தில் கடல் வெப்பநிலை 31.8 டிகிரி செல்சியசாக இருந்தது. அப்போது பவளப்பாறை வெளிர்தல் 5 சதவீதம் மட்டுமே இருந்தது. இதே வெப்பநிலை மே வரை தொடர்ந்தது. இந்த வெப்பநிலை உயர்வு காரணமாக பவளப்பாறை வெளிர்தல் சராசரியாக 28.20 சதவீதம் இருந்தது.
இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி தீவு பகுதியில் 30.80 சதவீதம் வெளிர்தல் இருந்தது. 18 பவளப்பாறை இனங்கள் வெளிர்தலால் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு வெளிர்தல், வெப்பநிலை உயர்வுக்கு ஏற்ற வகையில் இல்லை.
ஏப்ரல், மே மாதங்களில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல்களால் கடல் கொந்தளிப்பு, காற்று, மழை, மேகமூட்டம் போன்றவை ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
மேலும், இந்த ஆண்டுக்கான பவளப்பாறை வெளிர்தல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததுடன், பவளப்பாறைகள் மீண்டெழுந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நிகழ்வும் ஜூன் மாத தொடக்கத்திலேயே நடக்க தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் வெளிர்தல் ஏற்பட்ட பவளப்பாறைகள் அனைத்தும் முழுமையாக மீண்டெழுந்துவிடும். இந்த ஆண்டு பவளப்பாறைகள் இறப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேலும், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக கடலில் கழிவுகள் கலப்பது குறைந்துள்ளது. மேலும், மனித மற்றும் தொழிற்சாலை செயல்பாடுகள், மீன்பிடித் தொழில் போன்றவை நடைபெறாததும் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவைகள் விரைவாக வெளிர்தலில் இருந்து மீண்டெழுந்து வர செய்துள்ளன என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT