Last Updated : 18 Jun, 2020 02:03 PM

1  

Published : 18 Jun 2020 02:03 PM
Last Updated : 18 Jun 2020 02:03 PM

இந்த ஆட்சியை 8 மாசத்துக்குப் பிறகு ஆண்டவனால கூடக் காப்பாத்த முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கருத்து

தேனி

மூன்று முறை எம்எல்ஏ, ஒரு முறை ராஜ்ய சபா எம்.பி., 12 வருடம் அதிமுக மாவட்டச் செயலாளர் என அதிகாரம் செலுத்திவந்த ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன் இப்போது தானுண்டு தன்னுடைய தோட்டமுண்டு என்று சொந்த ஊரான கம்பம் நாராயணத்தேவன்பட்டியில் இருக்கிறார்.

எம்எல்ஏ பதவியை இழந்தாலும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகியிருக்கும் அவரிடம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் 11 எம்எல்ஏ வழக்கின் போக்கு குறித்துப் பேசினேன்.

எப்படி இருக்கீங்க?

’’நான் நல்லாத்தான் இருக்கேன். மக்கள்தான் பாவம் கஷ்டப்படுறாங்க. தேனி, கம்பம், பெரியகுளம்னு எல்லா ஊர்லேயும் கரோனா சமூகத் தொற்றா மாறிடுச்சி. தொழில் செய்றவங்க, கேரளாவுக்கு வேலைக்குப் போறவங்கன்னு எல்லாரும் பாதிக்கப்பட்டிருக்காங்க. பெரியகுளத்துல ஓபிஎஸ் வீட்டுப்பக்கம் இருக்கிற வார்டுல முழு ஊரடங்கு போட்டிருக்காங்க. 'ஒன்றிணைவோம் வா' திட்டத்துல திமுக சார்புல கொஞ்சம் உதவி செஞ்சோம். ஆள்றவங்க எதையும் கண்டுக்கல.

11 எம்எல்ஏ பதவிப் பறிப்பு வழக்கை ஃபாலோ பண்றீங்களா?

ஊரறிய, உலகறிய நடந்த ஜனநாயகப் படுகொலை அது. நாங்க கொறடா உத்தரவை மீறல, சபாநாயகர் கட்டளையை மீறல, ஆட்சிக்கு எதிரா ஓட்டும் போடல. ஆனா, 18 எம்எல்ஏக்களின் பதவியைக் காலி பண்ணுனாங்க. எல்லாத் தப்பையும் செஞ்ச பன்னீர்செல்வமும், அவரோட அணியினரும் ஆளுங்கட்சியாக வலம் வந்துகிட்டு இருக்காங்க. ரெக்கார்டு பூர்வமா அவங்க சிக்கியிருக்காங்க. சட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி பார்த்தா அவங்க பதவிதான் பறிக்கப்பட்டிருக்கணும். அதைத் தப்புன்னு சொல்றதுக்கு நம்ம நீதிமன்றங்களுக்கு என்ன தயக்கம்னு தெரியல. சம்பவம் நடந்தது 2017 பிப்ரவரியில. இன்னைக்கு 2020 ஜூன். வழக்கு போகுது போகுது... போய்க்கிட்டே இருக்குது.

சபாநாயகருக்கு சமீபத்துல முதல்வர் எழுதுன கடிதத்துல, அந்த 11 எம்எல்ஏக்களுக்கும் கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவும் இல்ல. அதை அவங்க மீறவும் இல்லைன்னு சொல்லியிருக்காரே?

இந்த வழக்கு மறுபடியும் உச்ச நீதிமன்றத்துக்கு வருதுன்னு தெரிஞ்ச பிறகு அவசர அவசரமா இந்த நாடகத்தை அரங்கேற்றம் பண்ணியிருக்காங்க. பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் அனுப்புன கடிதத்தை சபாநாயகர் எனக்கு அனுப்பி வெச்சிருக்காரு. அதுல பழனிசாமி என்ன சொல்லியிருக்காருன்னா, 'நாங்க ஒரு தனி அணியா செயல்பட்டோம், அவர் தனி அணியாச் செயல்பட்டாரு. இப்ப தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரிச்சிடுச்சி'ன்னு சொல்லியிருக்காரு.

ஓட்டுப்போட்டது எப்ப, தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டது எப்ப? அதுவும் தேர்தல் ஆணையம் அங்கீகரிச்சது இவங்க சேர்ந்ததைத்தானே தவிர, எதிர்த்து ஓட்டுப்போட்டதை அல்ல. அதனாலதான் அவங்க அரசியல் அமைப்புச் சட்டத்தையே ஏமாத்திட்டாங்க, ஃபிராடு பண்ணிட்டாங்கன்னு சொல்றோம்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10-வது ஷெட்யூல்ல, என்ன சொல்லிருக்கு என்றால் கொறடாதான் உத்தரவு போடணும்னு இல்ல. ஒரு டைரக்ஷன் இருந்தாப் போதும்னுதான் இருக்குது. கொறடாதான் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராத் தேர்ந்தெடுத்திட்டோம். அவர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வாராரு.

அதாவது, அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் அவருக்கு ஓட்டுப்போடணும்கிறதுதான் கட்சியோட டைரக்ஷன். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 பேரும் ரெட்டை இலையில நின்னு ஜெயிச்சவங்க. அதே ரெட்டை இலை சின்னத்துல ஜெயிச்ச எடப்பாடி பழனிசாமியைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கோம்னு கட்சியில இருந்து ஒரு டைரக்‌ஷன் வந்த பிறகு, திமுகவுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டது ஓபிஎஸ் ஆட்கள்தான். அவங்கள 15 நாட்களுக்குள்ள தகுதி நீக்கம் செஞ்சிருக்கணும். இதை நாங்க சொன்னோம். ஆனா, எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் இப்ப ஒரு கடிதம் எழுதி, அதை எங்களுக்கு அனுப்பி வெச்சிருக்காரு சபாநாயகரு.

அப்புறம் ஏன் உங்கள் பதவி பறிபோன விஷயத்தில் சட்டென முடிவெடுத்த நீதிமன்றம், இந்த விஷயத்திற்கு இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது?

மக்களும் இப்படித்தான் கேட்கிறாங்க. இதுக்கு நான் என்ன பதில் சொல்றது? நீதிமன்றம்தான் பதில் சொல்லணும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்ல. யப்பா, இவங்க கட்சி மாத்தி ஓட்டுப் போட்டிருக்காங்கப்பா. பதவியைக் காலி பண்ணுங்கப்பான்னு சட்டுபுட்டுன்னு தீர்ப்புச் சொல்லியிருக்கணும். இதுக்குப் போய் சபாநாயகர்தான் முடிவெடுக்கணும்னு சொல்லி, இவ்வளவு காலம் இழுத்தடிக்கும்போது தேவையில்லாத சந்தேகத்துக்கு வழியேற்படுத்துது. இனியும் இந்த வழக்குல நல்ல தீர்ப்பு வரலைன்னா, ஜனநாயகம் தோத்துப்போச்சு, நியாயம் செத்துப்போச்சுன்னு அர்த்தம். அவ்வளவுதான் என்னோட கருத்து.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

தமிழ்நாடு முழுக்கப் பொதுமுடக்கம் இருந்தப்ப, சென்னையில உள் முடக்கம் போட்டது மகா முட்டாள்தனம். அதுவும் தமிழ்நாடு முழுக்க எல்லாச் சந்தையையும் மூடிட்டு, ஆசியாவுலேயே பெரிய சந்தைன்னு சொல்ற கோயம்பேடு மார்க்கெட்டைத் திறந்தாங்க பாருங்க. படிக்காதவன் கூட இந்த வேலையச் செய்ய மாட்டான். சந்தையில மூட்டை தூக்குற ஒருத்தரக் கூப்பிட்டு, கருத்துக் கேட்டிருந்தாக்கூட, சார் அப்படிச் செய்யாதீகன்னு சொல்லியிருப்பாரு. ஆனா, துணை முதல்வரு, ஐஏஎஸ் அதிகாரிங்க எல்லாம் சேர்ந்து இப்படியொரு காரியத்தைப் பண்ணி, இன்னைக்கு தினமும் 30, 40 பேர் சாவற அளவுக்குக் கொண்டு போயிட்டாங்க.

சென்னையில இருந்து இ - பாஸ் எடுக்காம பைக் லாரியில மட்டும் 40 ஆயிரம் பேரு தென் மாவட்டங்களுக்கு வந்திருக்காங்களாம். அவங்க எத்தனை பேருக்குப் பரப்புனாங்கன்னு கணக்கு இல்ல. இந்த அரசாங்கம் மொத்தமாத் தோத்துப்போச்சு.

கரோனாவை கட்டுப்படுத்துறதவிட, அதை எப்படி மறைக்கலாம், கரோனாவுல ஏதாவது கொள்ளையடிக்க முடியுமான்னுதான் மொத்தக் கூட்டமும் திரியுது. மக்கள் கோவமா இருக்காங்க. இந்த ஆட்சியை இன்னும் 8 மாசம் வேணா மேல இருக்கிறவங்க காப்பாத்தலாம். அதுக்குப்பிறகு இவங்கள ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது’’.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x