Last Updated : 17 Jun, 2020 07:25 PM

 

Published : 17 Jun 2020 07:25 PM
Last Updated : 17 Jun 2020 07:25 PM

ஆதிச்சநல்லூர், சிவகளை தமிழகத்தின் பழமையான தொல்லியல் களம்: அழகாய்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் மற்றும் பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அகழாய்வு பணிகள் மற்றும் அதில் கிடைத்த பொருட்கள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆட்சியருக்கு விளக்கினர். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் ரூ. 1 கோடி செலவில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

2800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகள், இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்துள்ளார்கள் என்பதை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் குழிகள் தோண்டப்பட்டு, முதுமக்கள் தாழிகள் மற்றும் பொருட்களை மிகவும் பாதுகாப்பாக எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது வரை மோதிரம், பழங்காலத்தில் புகைப்பிடிக்க பயன்படுத்திய குழாய் போன்றவை ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சிவகளையிலும் பலவித பொருட்கள் கிடைத்துள்ளன. இது தூத்துக்குடி மாவட்டத்துக்கே பெருமையான விஷயமாகும். தமிழ்நாட்டில் மிகவும் பழமையான, அதாவது 2800 ஆண்டுகள் பழமையான தொல்லியல் களம் இது தான். எனவே இங்கு கிடைக்கும் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அந்த காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறு நமக்கு தெரிய வரும் என்று ஆட்சியர் கூறினார். தொல்லியல் துறையின் அகழாய்வு கள இயக்குநர்கள் பாஸ்கரன், பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x