Published : 13 Jun 2020 05:19 PM
Last Updated : 13 Jun 2020 05:19 PM
மீன்பிடித் தடைக்காலம், கரோனா ஊரடங்கு ஆகியவற்றால் 81 நாட்கள் கடந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் சுமார் 150 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்களும், மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா காரணமாக கடந்த மார்ச் 23 முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே, வருடந்தோறும் ஏப்ரல் 16 முதல் ஜூன் 15-ம் தேதி வரையிலான, மத்திய அரசின் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் மீனவர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து படகுகளைக் கரையேற்றி பழுது நீக்கம் செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீனவர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 1 முதல் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறை, படகுகளை மராமத்து செய்வதில் ஏற்பட்ட தாமதம், ஊரடங்கு உத்தரவு காரணமாக, வெளிமாவட்ட, வெளி மாநில வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், சிறு மீன் வியாபாரிகள் வராதது ஆகியவற்றின் காரணமாக, பிடித்து வரும் மீன்களை விற்க முடியாததால், கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அண்மையில் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு, கூட்ட முடிவின்படி இன்று (ஜூன் 13) காலை தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
சேதுபாவாசத்திரத்தில் இருந்து 51, மல்லிப்பட்டினத்திலிருந்து 25, கள்ளிவயல் தோட்டத்தில் இருந்து 47 என 123 படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதற்கான அனுமதிச் சீட்டை மீன்துறை அதிகாரிகள் வழங்கினர்.
மீனவர்கள் நீண்ட நாள் கழித்து கடலுக்குச் சென்றதால், வலைகள், மீன்பிடி உபகரணங்கள், ஐஸ் பெட்டிகள் ஆகியவற்றைப் படகுகளில் ஏற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதனால் மீன்பிடித் துறைமுகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இன்று கடலுக்குச் சென்ற படகுகள், மீன் பிடித்துக் கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கரை திரும்புவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT