Published : 13 Jun 2020 06:29 AM
Last Updated : 13 Jun 2020 06:29 AM

தஞ்சாவூர் அருகே 9, 10-ம் நூற்றாண்டு விஷ்ணு, சமணர் சிற்பங்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்:

தஞ்சாவூரை அடுத்த பூதலூரில் உள்ள கன்னிமார்தோப்பு என்ற வயல்வெளிகளில் சில சிற்பங்கள் காணப்படுவதாக அவ்வூரைச் சேர்ந்த புத்தர் என்பவர் கொடுத்த தகவலின்படி, அங்கு சென்று ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளரும், சரசுவதி மஹால் நூலக தமிழ்ப் பண்டிதருமான மணிமாறன் கூறியதாவது: இப்பகுதியில் மிகச்சிறிய சப்தமாதர், விஷ்ணு, சமண தீர்த்தங்கரர் ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.

அணிகலன்களுடன் காணப்படும் விஷ்ணுவின் சிற்பம் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலது கரத்தில் அபயம்காட்டி, இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு உள்ளது.

இதேபோல, சமண தீர்த்தங்கரரின் சிற்பம் முக்குடையின்கீழ் இருபுறமும் சாமரதாரிகள் சாமரம் வீச அமர்ந்த கோலத்தில் உள்ளது. இவை அனைத்தும் 9, 10-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இவற்றின் மூலம் இப்பகுதியில் சிவன், விஷ்ணு, சமணர் ஆலயங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், சோழர் கால கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் வயல்வெளி முழுவதும் உடைந்து கிடக்கின்றன. சோழர் கால குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x