Published : 12 Jun 2020 03:22 PM
Last Updated : 12 Jun 2020 03:22 PM

தக்காளி விலை படிப்படியாக உயர்வு: வரத்து தொடர்ந்து குறைவதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு- வியாபாரிகள் கணிப்பு

திண்டுக்கல் மொத்த மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தக்காளிபழங்கள். படம்: பு.க.பிரவீன்.

திண்டுக்கல்

வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தக்காளி விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்துவருகிறது. கரோனா ஊரடங்கிற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலையில் தேவை அதிகரிப்பதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விவசாயிகளிடம் மொத்தமாக கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் ஹோட்டல்கள், விடுதிகள் இயங்காததால் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.5 வரை விற்பனையானது. ஹோட்டல்கள், விடுதிகள் மூடப்பட்டது. விசேஷங்கள் ஏதும் இல்லாததால் தேவை அதிகம் இல்லாமல் விலைவீழ்ச்சி ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஹோட்டல்கள் திறக்கப்பட்டதுடன் மக்களும் வெளியேவந்து மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தக்காளியின் தேவை அதிகரித்துள்ளது. இருந்தபோதும் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் மே மாதம் கடைசி வாரத்தில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு பெட்டி(14 கிலோ) ரூ.80 க்கு விற்ற தக்காளி, படிப்படியாக விலை அதிகரிக்கதொடங்கி நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.220 வரை விற்பனையானது. மே இறுதியில் இருந்த விலையை விட இருமடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.15 வரை விற்பனையானது.

இதனால் வெளிமார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ. 20 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவு தேவை அதிகரிப்பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஊரடங்கு காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் தோட்டபணிக்கு செல்லாததால் புதிதாக தக்காளி நாற்று நடவு செய்வதும் பாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடவு செய்திருந்தால் ஜூலையில் அறுவடை செய்யலாம்.

ஆனால் தக்காளி நடவு ஊரடங்கால் தாமதமானநிலையில் அடுத்த விளைச்சல் வரும்வரை குறைந்த அளவிலான தக்காளியே மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டுவருவர். எனவே தக்காளி விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.50 யை தொட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x