Published : 11 Jun 2020 04:36 PM
Last Updated : 11 Jun 2020 04:36 PM
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த தீட்சிதர் ஒருவர், ஊரடங்கு காலத்தில் 76 நாட்களாக கிராமம் கிராமமாகச் சென்று ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு கோபுர வாயில் நித்ய அன்னதானம் சார்பில் ராஜா தீட்சிதர் ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவிக்கும் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு 76 நாட்களாக அன்னதானம் வழங்கி வருகிறார்.
சிதம்பரம் ஓமகுளம்பகுதி, சி.கொத்தங்குடி, சி.தண்டோசநல்லலூர், நாஞ்சலூர், வக்காரமாரி, துணிசிரமேடு, திருநாரையூர், கவரப்பட்டு, கூத்தன்கோவில், மடுவங்கரை, முகையூர், தியாகவல்லி, நஞ்சமகத்து வாழ்க்கை உள்ளிட்ட சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார்.
73-வது நாளாக சிதம்பரம் ஓமகுளம் நந்தனார் மடத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருடாநந்தா சுவாமிகள், அணி வணிகர் ராமநாதன், திருவாடுதுறை மடம் சிதம்பரம் நிர்வாகி செந்தில்குமார் மற்றும் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 76-வது நாளாக இன்று (ஜூன் 11) நஞ்சமகத்து வாழ்க்கை கிராமத்தில் அன்னதானம் செய்யப்பட்டது.
இதுகுறித்து ராஜா தீட்சிதர் கூறுகையில், "நடராஜர் கோயில் தெற்கு சன்னதி உட்பகுதியில் தினமும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு அவர்கள் கிராமத்துக்கே சென்று அன்னதானம் செய்யலாம் என்று முடிவு எடுத்து தினமும் மினிடெம்போவில் உணவு எடுத்துக் கொண்டு ஒரு கிராமத்துக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்து வருகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT