Published : 10 Jun 2020 02:04 PM
Last Updated : 10 Jun 2020 02:04 PM
விழுப்புரம் அருகே 10 மீட்டர் தூரத்தில் நோயாளியை நிற்க வைத்து டார்ச் அடித்து தொண்டை வலிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உட்பட 2 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது கரோனா தொற்று காரணமாக அனைவரும் சுமார் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இம்மருத்துவமனையில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் 'ஸ்டூல்' ஒன்றை வைத்து அதில் நோயாளியை அமர வைத்து தூரத்தில் இருந்தபடி நோயின் தன்மை குறித்துக் கேட்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே நேற்று (ஜூன் 9) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், இம்மருத்துவமனைக்கு வந்த இளைஞர் ஒருவரை அதேபோல நிற்க வைத்து, பணியில் இருந்த மருத்துவர் பிரகாஷ், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பூஞ்சோலை ஆகியோர் என்ன நோய் எனக் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர் தான் உட்கார்ந்த இடத்திலிருந்து 'டார்ச்' அடித்துப் பார்த்து அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை அளிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமாரைக் கேட்டபோது, "இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT