Last Updated : 08 Jun, 2020 10:10 PM

2  

Published : 08 Jun 2020 10:10 PM
Last Updated : 08 Jun 2020 10:10 PM

அனைத்து போர்களிலும் பங்கேற்ற ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கொண்டாடிய 100-வது பிறந்த நாள்: நேரில் வாழ்த்து சொன்ன விமானப் படை, அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி பி.டி.பாண்டியன் தனது 100-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதனை முன்னிட்டு இந்திய விமானப்படை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் பி.டி.பாண்டியன் (100). இவர் கடந்த 1944-ம் ஆண்டு ராயல் இந்திய விமானப்படையில் வீரராக பணியில் சேர்ந்தார். விமானப் படையில் 31 ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1975-ல் விமானப்படை வாரண்ட் அதிகாரியாக உயர்ந்து பணியில் இருந்து ஓய்வு பெற்றார். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நடைபெற்ற அனைத்து போர்களிலும் பாண்டியன் பங்கேற்றுள்ளார்.

08.06.1920-ல் பிறந்த பாண்டியன் தனது 100-வது நாளை இன்று கொண்டாடினார். நாட்டுக்கும், விமானப் படைக்கும் அவர் ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் இந்திய விமானப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய விமானப் படையின் திருவனந்தபுரம் தென்பிராந்திய அலுவலகத்தில் இருந்து 2 அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் குழுவினர் ஆறுமுகநேரிக்கு நேரில் வந்து, இந்திய விமானப் படை தளபதி சார்பில் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்தினர்.

அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் கர்னல் மு.நாகராஜன் மற்றும் முன்னாள் படைவீரர் வாரிய துணைத் தலைவர் கர்னல் சுந்தரம், முன்னாள் படைவீரர் மருத்துவமனை அதிகாரி விங் கமாண்டர் வி.ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் படைவீரர்கள், அரசு அதிகாரிகள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், அவரது 2 மகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இணைந்து பி.டி.பாண்டியனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x