Published : 06 Jun 2020 03:13 PM
Last Updated : 06 Jun 2020 03:13 PM
தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மலையையொட்டிய பகுதிகள் விவசாயம் செழிப்பாக நடைபெறும் பகுதிகள்.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் பெய்யும் சாரல் மழை விவசாயிகளை மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளையும் குதூகலிக்கச் செய்யும்.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
குளுகுளுவென வீசும் தென்றல் காற்று, வானில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம், மெல்லிய சாரல் மழை, மூலிகைகளின் நறுமணம் போன்றவற்றை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவார்கள்.
தமிழ் மாதங்களான கார்த்திகை, மார்கழி, தை மாத தொடக்கத்தில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வழியாக வந்து செல்வார்கள். வடகிழக்கு பருவமழையால் இந்த காலத்திலும் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து இருக்கும். இருப்பினும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கிடைக்கும் தென்றல் காற்று, சாரல் மழை போன்றவற்றை அனுபவிக்க முடியாது.
மொத்தத்தில் ஆண்டில் 5 மாதங்கள் குற்றாலம் களைகட்டி காணப்படும். மற்ற 7 மாதங்களும் ஆள் நடமாட்டம் குறைந்து களையிழந்து காணப்படும்.
இந்த ஆண்டில் கடந்த 2-ம் தேதி சாரல் மழை பெய்து, அருவிகளில் நீர் வரத்து தொடங்கியது. நேற்று இரவு முதல் சாரல் களைகட்டத் தொடங்கியுள்ளது. இன்று காலையில் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
ஆனால் வழக்கமான குதூகலத்தை இழந்து வெறுமையாகக் காணப்படுகிறது குற்றாலம். உலகையே புரட்டிப் போட்ட கரோனா குற்றாலம் சீஸனையும் புரட்டிப் போட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதால், குற்றாலமும் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதுகுறித்து குற்றாலம் வியாபாரிகள் சங்கத் தலைவர் காவையா கூறும்போது, “குற்றாலத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள், குற்றாலநாதர் கோயிலுக்குச் சொந்தமான கடைகள், தற்காலிகக் கடைகள், தனியார் கடைகள் என 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட வீடுகளும் சீஸன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.
சீஸன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளை நம்பியே குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், கட்டிடங்களை வாடகைக்கு விடுவோருக்கு வருவாய் கிடைக்கிறது. தற்போது மேலும், குற்றாலம் பேரூராட்சி, அறநிலையத் துறைக்கும் கார் பார்க்கிங், கடைகள் ஏலம் மூலம் வருவாய் அதிக அளவில் கிடைக்கும்.
கரோனா ஊரடங்கால் குற்றாலம் அருவிகளுக்கு குளிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலமான குற்றாலம் களையிழந்து காணப்படுகிறது.
ஆரம்பத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு இருந்த நிலையில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, குற்றாலத்திலும் தளர்வுகள் அளித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT