Published : 04 Jun 2020 08:37 PM
Last Updated : 04 Jun 2020 08:37 PM
மூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி செய்யப்பட்டுள்ள நிலையில், அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட சட்டம் இயற்றிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை:
"புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய 13 வயது மகளை மந்திரவாதி வசந்தியின் பேச்சை நம்பி கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி மூக்காயியும் சேர்ந்து இந்தக் கொலையினைச் செய்துள்ளனர். சிறுமியை நரபலி கொடுத்தால் பணம் அதிகமாகச் சேரும் என மந்திரவாதியான வசந்தியின் ஆலோசனைப்படி தனது மகள் என்றும் பாராமல் இந்தக் கொடுமையைச் செய்துள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மூடநம்பிக்கை மூடப்பழக்கவழக்கங்களால் இத்தகைய கொடூரம் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் மந்திரவாதிகள் என்ற பெயரில் மாந்திரீகம் செய்வதாகவும், பேய், பிசாசு விரட்டுவதாகவும் கூறி பலர் பொதுமக்களை மோசடி செய்து வருகின்றனர். இவர்களது தந்திரத்திற்கு ஏமாந்து பலர் தங்களது உடைமைகளை இழந்து நிர்கதியில் நிற்கின்றனர்.
மேற்கண்ட சிறுமியின் படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை காவல்துறை முறையாக நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், தமிழகத்தில் மூடநம்பிக்கை காரணமாக நரபலிகள் கொடுப்பது குழந்தைகளையும் பெண்களையும் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவது போன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மூடப்பழக்கவழக்கங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51 A (H) ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் உணர்வையும், மனிதத்தையும், பகுத்தறிவையும் பெறுவது அடிப்படைக் கடமை என வரையறுத்துள்ளது. இந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதை உத்தரவாதப்படுத்துவதற்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதும் அரசின் கடமையாகும்.
பகுத்தறிவு இயக்கப் பாரம்பரியம் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இத்தகைய சட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகவும் பலர் பொதுமக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் உருவாக்கி வருகின்றனர்.
மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் பரப்பி வருவோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்தகைய நம்பிக்கைகளை எதிர்த்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் மக்களுக்கு அறிவியல்பூர்வமான சிந்தனையை வளர்ப்பதற்கு உரிய சட்டங்களையும் ஏற்பாடுகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT