Published : 03 Jun 2020 03:07 PM
Last Updated : 03 Jun 2020 03:07 PM
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பகுதியில் மட்டும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிபண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் கடந்த மாதம் 15-ம் தேதி ஊருக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
அந்த சடலத்துடன் உறவினர்கள் சிலரும் சென்னையில் இருந்து வந்து, இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு சென்னைக்கே திரும்பிவிட்டனர். மேலும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தென்திருப்பேரை பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி அருகே உள்ள கோவங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவருக்கு முதலில் கரோனா உறுதி செய்யப்பட்டது. சடலத்துடன் சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்த ஆடிட்டருடன் தொடர்பு கொண்டிருந்த குடும்பத்தினர் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த தென்திருப்பேரை, மாவடிப்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று வரை தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை பகுதியில் மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே பகுதியில் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தப் பகுதி முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, தென்திருப்பேரை மற்றும் மாவடிப்பண்ணை பகுதிகளில் உள்ள முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகள் பேரிகார்டு மற்றும் முட்செடிகளின் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி மருந்துகளைத் தெளித்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து தொடர்ந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல் காயல்பட்டினம் பகுதியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு பிளம்பர் மூலம் 9 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. எனவே, காயல்பட்டினம் பகுதியும் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT