Published : 03 Jun 2020 06:50 AM
Last Updated : 03 Jun 2020 06:50 AM
பாலைவன வெட்டுக்கிளிகள் வருகையைக் கண்காணிக்க தமிழக எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாநில வேளாண்மைத் துறை இயக்குநர் க.தெட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
குறுவை சாகுபடி முன்னேற் பாடு பணிகள் தொடர்பாக வேளாண் மைத் துறை அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகளுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோ சனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யவும், அதன் மூலம் 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்திக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடமேற்கு இந்தியாவில் உள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பான தகவல்களை அறிய மத்திய அரசு ஜோத்பூரில் எச்சரிக்கை மையத்தை தொடங்கியுள்ளது. அந்த மையத்துடன் நாங்கள் தினமும் தொடர்புகொண்டு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து கேட்டு வருகிறோம்.
தற்போது, காற்றின் திசை கிழக்கு நோக்கி இருப்பதால், வெட்டுக்கிளிகள் பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. விந்திய மலைத்தொடரும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழகத் துக்கு அரணாக இருப்பதால், பாலைவன வெட்டுக்கிளிகள் இங்கு வர வாய்ப்பில்லை.
தமிழகத்தில் தற்போது சில இடங்களில் காணப்படும் வெட்டுக் கிளிகள் அனைத்தும் நன்மை தருபவைதான். வெட்டுக்கிளிகள் தொடர்பான தகவல்களை உழவன் செயலி வாயிலாக விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், தங்கள் பகுதியில் வெட்டுக்கிளிகள் இருந்தால் அவற்றைப் படம் எடுத்து உழவன் செயலியில் பதிவு செய்தால், உரிய ஆலோசனை வழங்கப்படும். முன்னெச்சரிக்கையாக, பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக மாநில எல்லையோரங்களில் உள்ள மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்டாவில் பருத்தி வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் இந்திய பருத்திக் கழகம் தனது மையத்தை தொடங்கி, நேரிடையாக கிலோ ரூ.54.55-க்கு பருத்தியை கொள்முதல் செய்ய உள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சியர் ம.கோவிந் தராவ், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஏ.ஜஸ் டின் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT