Published : 30 May 2020 03:29 PM
Last Updated : 30 May 2020 03:29 PM
புளியங்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 49 பேரில் 48 பேர் குணமடைந்துள்ளனர். 1-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் தற்போது சிகிச்சையில் உள்ளார். இதனால், 60 நாட்களுக்குப் பின் புளியங்குடியில் இயல்பு நிலை திரும்பிவருகிறது.
தென்காசி மாவட்டத்தில் நன்னகரம், புளியங்குடியில் முதன் முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
பல நாட்களாக மற்ற பகுதிகளில் கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், புளியங்குடியில் மட்டும் கரோனா தொற்று கிடுகிடுவென அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு கிராமப்பகுதிகளிலும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை நன்னகரம், புளியங்குடி, சேர்ந்தமரம், பொய்கை, காளத்திமடம், வெங்கடேஸ்வரபுரம், சுப்பையாபுரம், ராஜகோபாலப்பேரி, கிருஷ்ணப்பேரி, கண்டப்பட்டி, வென்றிலிங்கபுரம், பொட்டல்புதூர், மடத்துப்பட்டி, புதுப்பட்டி, வீரகேரளம்புதூர், செல்லப்பிள்ளையார்குளம், பாவூர்சத்திரம், வாகைகுளம், சேர்வைகாரன்பட்டி, ஓடைமரிச்சான், அரியநாயகிபுரம், முதலியார்பட்டி, கீழப்புலியூர், மாயமான்குறிச்சி, நாரணபுரம், தென்காசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கரோனாவால் 86 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 49 பேர் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால், புளியங்குடியில் 60 நாட்களுக்கு மேலாக கட்டுப்பாடுகள் நீடித்தது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக குணமடைந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 59 பேர் குணமடைந்துள்ளனர். புளியங்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 49 பேரில் 48 பேர் குணமடைந்துள்ளனர். 1-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இதனால், 1-வது வார்டில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது. புளியங்குடியில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட மற்ற பகுதிகளான அகஸ்தியர் கோயில் தெரு, முத்து தெரு, காந்தி பஜார், மெயின் ரோடு கிழக்கு பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT