Published : 24 Aug 2015 10:30 AM
Last Updated : 24 Aug 2015 10:30 AM
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை (திங்கள்கிழமை) 10 மணிக்கு தொடங்கியது. ஆர்.கே.நகர் தொகுதி வெற்றிக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தொடங்கியுள்ள பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 29-ம் தேதி வரை பேரவை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
முதல்வருக்கு உற்சாக வரவேற்பு:
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, மே 23-ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த இரு நிகழ்வுகளுக்குப் பின்னரும் அவர் முதல் முறையாக இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றுச் சென்றார்.
பின்னர் அவை கூடியதும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு பேரவைத் தலைவர் தனபால் வாழ்த்து தெரிவித்தார். ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது தமிழ் பூமி கண்டிராத வெற்றி என அவர் புகழ்ந்தார்.
இரங்கல் தீர்மானம்:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், சமீபத்தில் இறந்த முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான செந்தூர் பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய மூவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மறைந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் அவையில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்:
அப்துல் கலாம் மறைவுக்கு பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம், "இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்றும் அணுசக்தி நாயகன் என்றும் தலைசிறந்த விஞ்ஞானி என்றும் திருக்குறள் வழி நடப்பவர் என்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்றும் போற்றப்படுபவரும், தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், எழுத்துக்களாலும் தனது எளிமை மற்றும் மென்மையான அணுகுமுறையினால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவரும், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தவரும், தமிழகத்தின் மண்ணின் மைந்தருமாகிய பன்முகத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் 27.7.2015 அன்று தனது 83-வது அகவையில் திடீரென மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
ராமேஸ்வரத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமது கடின உழைப்பினாலும் ஒருமுக சிந்தனையாலும் விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராக விளங்கினார்.
குடியரசுத் தலைவராக இருந்தபோதும், அதன் பின்னரும் அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது. 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டவர். இந்தியா வல்லரசாக உருவெடுக்க மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக 'கனவு காணுங்கள்' அது உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டுமென்றும், வெற்றிபெற வேண்டுமென்றால் பதட்டமில்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்தவழி என்றும் வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார். இளைய தலைமுறையினரும், மாணாக்கர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றிட உந்துசக்தியாக விளங்கினார். அன்னாரது பிறந்த தினம் 'இளைஞர் எழுச்சி நாளாக' தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது நினைவைப் போற்றும் விதமாக 'டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது' சுதந்திர தினத்தன்று தமிழக அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது"
நாளை விவாதம்:
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின்போது மதுவிலக்கு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட சில பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்க ஆளும்கட்சி தரப்பிலும் தயாராகி வருகின்றனர்.
19 நாட்கள் நடக்கிறது
ஆகஸ்ட் 28 (ஓணம் பண்டிகை), செப்டம்பர் 17 (விநாயகர் சதுர்த்தி), 24 (பக்ரீத்) என அரசு விடு முறை தினங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பேரவைக் கூட்டம் இல்லை. இது தவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9,10 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இதையொட்டி, செப்டம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் தவிர்த்து மொத்தம் 19 நாட்கள் பேரவைக் கூட்டம் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT