Published : 24 May 2020 04:30 PM
Last Updated : 24 May 2020 04:30 PM
ஆழ்குழாய் மின் மோட்டாரின் கூடுதல் குதிரைத் திறனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை வாபஸ் பெறவேண்டும் என தமிழக உழவர் மன்றக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு மின்சாரச் சட்டத் திருத்தத்தங்களை மேற்கொண்டு அதைச் செயல்படுத்த மாநில மின்வாரியத்தை அறிவுறுத்தி வருகிறது. அதன்படி ஆழ்குழாய் கிணறுகளில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களின் குதிரைத் திறன் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப ஒரு குதிரைத் திறனுக்கு ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் ஆழ்குழாய் பாசனம் தடைப்பட நேரிடும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழக உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், ''தொடக்கத்தில் மின் இணைப்பு வாங்கியபோது, ஒரு குதிரைத் திறனுக்கு ரூ.50 செலுத்தி தண்ணீர் இறைத்தோம். நாளடைவில் அந்தக் கட்டணத்தை ரூ.600 என வசூலித்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு குதிரைத் திறனுக்கு ரூ.20 ஆயிரம் என நிர்ணயித்திருப்பது விவசாயிகளை வேதனையின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது. அதுவும் பொதுமுடக்கக் காலத்தில், விவசாயிகளுக்கு இத்தகையை கட்டணத்தை நிர்ணயித்திருப்பது மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது.
பொய்த்துப் போகும் பருவமழையினாலும், பருவம் தவறிப் பெய்யும் மழையினாலும், ஆழ்துளைக் கிணறுகளை நம்பித்தான் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் விவசாயிகள், மின் மோட்டார் வைத்து நீர் இரைத்து பயிர் சாகுபடி செய்யும் நிலைதான் இருக்கின்றது.
இயற்கைப் பேரிடர், நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றங்கள், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு குறைந்தபட்ச ஆதார விலையின்றி தவிக்கும் போன்ற சூழல்களை எதிர்கொண்டு, விவசாயிகள் விவசாயத் தொழிலைக் கைவிடாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகள், அரசு ஏற்கெனவே அனுமதித்துள்ள 5 மற்றும் 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீர் ஆயிரம் முதல் 1800 அடி வரை சென்றதால், தற்போது 12 முதல் 15 குதிரைத் திறன் மோட்டார்களைப் பயன்படுத்தி நீர் இரைத்தால்தான் பயிர் சாகுபடி செய்ய முடியும் நிலை,
இந்த நிலையில் மத்திய அரசின் மின்சாரத்துறை சட்டத் திருத்தங்கள் விவசாயிகளுக்கு துரோகமிழைக்கும் வகையில் உள்ளது. தமிழக அரசின் மின் கட்டணம் தொடர்பான அரசாணை, விவசாயிகளுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. எனவே விவசாயத்தை பாதுகாக்க கூடுதல் குதிரைத் திறன் மின் மோட்டார் பயன்பாட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை அரசு வாபஸ் பெறவேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT