Last Updated : 23 May, 2020 05:55 PM

 

Published : 23 May 2020 05:55 PM
Last Updated : 23 May 2020 05:55 PM

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி: விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு

ஓட்டப்பிடாரம் அருகே குமரெட்டியாபுரம் கிராமத்தில் கோடை உழவு நடைபெறுவதை வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை துறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து கட்டணமின்றி கோடை உழவு செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

பயிர் விளைச்சலை அதிகரிக்க மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு செய்வது வழக்கம். இதற்கென விவசாயிகள் கனிசமான தொகையை செலவு செய்கின்றனர்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு விவசாயிகளுக்கு கோடை உழவை கட்டணமின்றி இலவசமாகவே செய்து கொடுக்க 'டாபே' என்ற தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் குமாரரெட்டியாபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வட்டார விவசாயிகள் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாட்டில் டாபே நிறுவனம் மூலம் 107 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 318 ஏக்கரில் இலவச கோடை உழவு நடைபெறுகிறது.

இந்த பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

வாலசமுத்திரம் கிராமத்தில் 112 சிறு, குறு விவசாயிகளுக்கு 340 ஏக்கர் பரப்பில் இலவச கோடை உழவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குமரரெட்டியாபுரம் கிராமத்தில் 318 ஏக்கரில் கோடை உழவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து முத்துக்குமாரபுரம், மிளகுநத்தம், ஆதனூர், சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 700 ஏக்கரில் கட்டணமின்றி கோடை உழவு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x