Published : 17 Aug 2015 01:12 PM
Last Updated : 17 Aug 2015 01:12 PM

இலவசங்கள் ஒழிந்தால் சமுதாயம் மேம்படும்: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு

"இலவசங்கள் ஒழியும்போதுதான் சமுதாயம் மேம்படும்" என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவசுப்ரமணியம் பேசினார்.

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணனை சிறப்பிக்கும் முப்பெரும் விழா நாமக்கல் சணு இன்டர்நேஷனல் ஓட்டலில் நடை பெற்றது.

வழக்கறிஞர் தஞ்சை ராமமூர்த்தி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவசுப்ரமணியம், ‘மதுவின் கொடுமைகள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

மதுவின் கொடுமைகள் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. மதுவுக்கு எதிராக மக்களிடம் வலிமையான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு அரசை மட்டும் குறைசொல்ல முடியாது.

இலவசங்களுக்கு மக்கள் ஆசைப்படுவதை உணர்ந்த ஆட்சியாளர்கள், இலவசங்களை வழங்குகின்றனர். இதற்கு அரசுக்கு பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தேவையை மதுக்கடைகள் பூர்த்தி செய்கின்றன.

இலவச மின்சாரம் உட்பட எந்த இலவசமும் ஏற்கமாட்டோம் என, மக்கள் திரண்டு எழுந்தால், மதுக்கடைகள் திறப்பது போன்ற சமூகத்தை பாழடிக்கும் செயல்களை அரசு செய்யாது. இலவசங்கள் ஒழியும்போதுதான் சமுதாயம் மேம்படும்.

அந்த கால கட்டத்தில் இருந்த அரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு பேசும்படி இப்போது யாரும் இல்லை. பெரியார், காமராஜர் வழியில் வந்த டி.எம்.காளியண்ணன் போல் இப்போதுள்ள மாணவர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டி.எம்.காளியண்ணனின் மகன் வழக்கறிஞர் கா.ராஜேஸ்வரன், வழக்கறிஞர் பி.ரத்தினம், மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் நா.சிவப்பிரகாசம், மக்கள் சக்தி இயக்க செயலாளர் கா.பெருமாள், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கா.நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x