Last Updated : 20 May, 2020 05:11 PM

 

Published : 20 May 2020 05:11 PM
Last Updated : 20 May 2020 05:11 PM

அரசு மருத்துவர்களின் 10 மணி நேர தீவிர சிகிச்சையால் கொடிய விஷப்பாம்பு கடியில் இருந்து மீண்ட 13 வயது சிறுவன்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொடிய விஷப்பாம்பு கடியில் இருந்து மீண்ட சிறுவனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவர்களின் 10 மணி நேர தீவிர சிகிச்சையால் கொடிய விஷப்பாம்பு கடியில் இருந்து 13 வயது சிறுவன் ஒருவர் மீண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் குருகார்த்திக் (13). இச்சிறுவன் நேற்று வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது கடும் விஷ தன்மையுள்ள கட்டுவிரியன் பாம்பு அவனை கடித்துவிட்டது.

மிகவும் ஆபத்தான நிலையில் சிறுவனை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வரும்போதே முற்றிலும் மயங்கிய நிலையில், உணர்வே இல்லாமல் இருந்தான். நாடித்துடிப்பும், இரத்த அழுத்தமும் பதிவு செய்ய முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது.

இதை அறிந்த மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், உடனடியாக மருத்துவ துறை அவசர பிரிவை தொடர்பு கொண்டு அனைத்து வகையான சிகிச்சையும் தாமதமின்றி சிறுவனுக்கு கிடைக்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி, சுவாசம் சீராக இயங்க கூடிய மருந்துகளை செலுத்தினர்.

சுமார் 10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது. சிறுவனுக்கு முழு உணர்வு படிப்படியாக திரும்பியது, நாடி துடிப்பு, இரத்த அழுத்தம் சீரானது. எழுந்து அமர்ந்து வாய்வழியாக உணவு உண்ணும் நிலைக்கு முன்னேறியுள்ளான்.

மருத்துவ குழுவினரின் கடின முயற்சியே தன் மகன் உயிர்பிழைக்க காரணம் சிறுவனின் தாய் மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். முதல்வர் ரேவதி பாலன் கூறும்போது, கொடிய விஷப்பாம்பின் கடியிலிருந்து இவ்வளவு விரைவில் சிறுவன் குணமானது, அரசு மருத்துவ மனையின் ஒரு சாதனையாகும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x