Published : 11 May 2020 12:45 PM
Last Updated : 11 May 2020 12:45 PM
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கல்குவாரியில் ஆய்வு செய்த டிஆர்ஓ, டிஎஸ்பி சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே காட்டுமுன்னூரில் தனியார் கல்குவாரி உள்ளது. இரவு நேரங்களில் சட்டவிரோதமாகக் குவாரி செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், அரவக்குறிச்சி டிஎஸ்பி கல்யாணகுமார், புகழூர் வட்டாட்சியர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீஸார் நேற்று இரவு குவாரிக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அவர்கள் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும்போது குவாரியின் நுழைவாயில் கேட் பூட்டப்பட்டு கேட் முன்பு லாரி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், டிஎஸ்பி கல்யாணகுமார் உள்ளிட்டோர் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்துத் தகவலறிந்த கரூர் நகர டிஎஸ்பி சுகுமார், சமூக நீதி டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் ரமாதேவி, உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் கேட் சாவியைப் பெற்று கேட்டைத் திறந்து, லாரியை நகர்த்தினர். அதன் பிறகு மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், டிஎஸ்பி கல்யாணகுமார் உள்ளிட்டோர் 3 மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தனர்.
இதுகுறித்து டிஆர்ஓ சி.ராஜேந்திரனை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை. காவல் கண்காணிப்பாளர் ரா.பாண்டியராஜன் கூறும்போது, ''க.பரமத்தியில் உள்ள தனியார் குவாரி இரவு நேரங்களில் செயல்படுவதாகக் கிடைத்த தகவலால் டிஆர்ஓ, டிஎஸ்பி குவாரியில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கேட் பூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் சென்று கேட்டைத் திறந்துவிட்டனர். புகார் வந்தால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT