Published : 17 Aug 2015 08:13 AM
Last Updated : 17 Aug 2015 08:13 AM

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே போலீஸார் துப்பாக்கிச் சூடு: தேர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 வீடுகள் தீ வைத்து எரிப்பு - 11 பெண்கள் உட்பட 70 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட மோதலில் தேர் மற்றும் 4 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இக் கிராமத்தில் 79 குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அந்த பகுதியில் மாரியம்மன் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக இருபிரிவினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இதனால் கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகமும் தேரோட்டம் நடத்த தடை விதித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு தேரோட்டத்தை நடத்த சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கிராமத்தை சேர்ந்த இருபிரிவினரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தேரை பொதுப்பாதை வழியாக இழுத்துச்செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தேர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவை யொட்டி போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு தேர் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் தேர் எரிந்து சேதமடைந்தது. தீயை அணைக்க முயன்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் தெருவிளக்குகளை அடித்து நொறுக்கி மின் இணைப்பை துண்டித்தது. இந்த சமயத்தில் அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால் கிராமத்துக்குள் போலீஸார் நுழைய ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி போலீஸார் உள்ளே நுழைந்து தடியடி நடத்தினர். அப்போது போலீஸார் மீது வன்முறை கும்பல் கற்களை வீசித் தாக்கியது.

இதில் எஸ்.பி. நரேந்திர நாயர் உட்பட 10 போலீஸார் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து தீ வைக்கப்பட்ட தேர் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் டிஐஜி சுமித்சரண் தலைமையில் எஸ்பிக்கள் நரேந்திர நாயர் (விழுப்புரம்), விஜயகுமார் (கடலூர்), பொன்னி (திருவண்ணா மலை) ஆகியோர் மேற்பார்வையில் மூன்று மாவட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு வீடு வீடாக சோதனை மேற்கொண்ட போலீஸார் 11 பெண்கள் உட்பட 70 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சேஷசமுத்திரம் பகுதியில் 144 தடை உத்தரவை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மாலதி பிறப்பித்துள்ளார். தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x